ஆதி சங்கரர் என்றாலே அத்வைதமும் பஜகோவிந்தமும் நமக்கு நினைவுக்கு வரும். இந்து மதத்தின் சாராம்சத்தை அழகிய முறையில் அத்வைதமாக எடுத்து சொல்லி நம் மதத்தை சரிய விடாமல் தூக்கி நிறுத்தியவர் ஆதி சங்கரர். அகிலம் வணங்கும் சத்குரு. தத்துவ ஞானி. இந்து மதத்தின் உண்மைகளையும், பெருமைகளையும் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்து கூறிய உன்னத மத போதகர்.
சங்கரர் இல்லை என்றால் இன்று இந்து மதம் இவ்வளவு தழைத்து ஓங்கி இருக்காது. அவர் வாழ்ந்த காலகட்டம் அப்படி. புத்த மதத்தவரும், சமணர்களும் தங்கள் மத பிரசாரத்தில் ஓங்கி இருந்த நேரமது. அந்த நேரத்தில் தான் ஆதி சங்கரர் நமது மதத்தை தலை தூக்கி நிறுத்த வந்த அவதார புருஷராகத் தோன்றினார். அத்வைத சித்தாந்தத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி இந்து மதத்தின் அடிப்படை கொள்கையை விளக்கினார். ஆத்மா வேறு பரமாத்மா வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. ஆத்மா உடலிலிருந்து நீங்கியவுடன் பரமாத்மாவோடு இணைகிறது என்ற உண்மையை மக்களுக்கு கொண்டு சென்றார்.
சங்கரர் கேரளாவில் உள்ள காலடி என்னும் க்ஷேத்திரத்தில் சிவகுருவுக்கும் ஆர்யாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார்
தந்தையை வெகு விரைவில் இழந்த அவர் தாயாரால் வளர்க்கப்பட்டார். சன்யாச தர்மத்தில் ஆர்வம் கொண்ட அவருக்கு தாயிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. அவரது எட்டாவது வயதில் ஆற்றில் குளித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு முதலையால் கவ்வப்பட்டார். தாயை அழைத்த சங்கரர் சன்யாச தர்மம் தழுவ தாயிடம் வேண்டினார்.
முதலை தன்னை கொல்லும் தருவாயில் சந்யாசியாக இறக்க ஆசைப்படுவதாக கூறினார். மகனை உயிரோடு பார்க்க ஆசைப்பட்ட ஆர்யாம்பாளும் இதற்கு சம்மதித்தார். என்னே விந்தை! சங்கரரின் மந்திர சக்தியால் முதலை அவரை விட்டு சென்றது. அவரும் சன்யாசி ஆனார்.
அன்று முதல் சங்கரரின் ஆன்மீக வேட்டை தொடங்கியது. தனது அறிவு தாகத்தை தணிக்க நல்லதொரு குருவை தேடி அலைந்தார் சங்கரர். அவர் கண்டது கோவிந்தபகவத்பாதரை. கண்ட இடமோ வட இந்தியாவின் நடு பகுதியில். தனது குருவுடன் பிரம்ம சூத்திரம், உபநிஷத், பகவத்கீதை ஆகியவற்றை படித்தறிந்த சங்கரர் பின்னர் அவற்றிற்கு விளக்க உரைகளும் எழுதினார்.
சங்கரர் சிறு வயதில் முதலையின் பிடியில் மாட்டியது நாம் அறிந்ததே. அதற்கு பின் நடந்தது என்ன? அவரின் மந்திர மகிமையால் முதலை அவரை விட்டு அகன்றது. அவரும் சந்யாசியாக தனது அறிவுத் தேடுதலை தொடங்கினார்.
காசியில் வீடு வீடாக சென்று பிக்ஷை எடுக்கும் போது சங்கரருக்கு ஒரு மூதாட்டி உலர்ந்த நெல்லி கனி ஒன்று தந்தார். அவரிடம் பிக்ஷை அளிக்க வேறு எதுவும் இல்லை. அவரின் கருணை உள்ளம் கண்டு நெகிழ்ந்த சங்கரர் அன்னை மகாலக்ஷ்மியை தொழுது அந்த மூதாட்டிக்கு செல்வம் வழங்க வேண்டினார். மனம் இரங்கிய லக்ஷ்மி தேவி அந்த மூதாட்டியின் கூரையிலிருந்து தங்க நெல்லிகனிகளை கொட்டினாள். அந்த மூதாட்டிக்கு லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க காரணமாய் இருந்த ஸ்லோகம் சங்கரரின் கனக தாரா ஸ்தோத்திரம் ஆகும்.
தனது தாய் இறக்கும் தருவாயை தனது ஞான த்ருஷ்டியால் அறிந்து கொண்டார் சங்கரர். தனது ஊருக்கு சென்று, தாயின் தகனத்திற்கான ஏற்பாட்டை செய்ய முயலும்போது அவருக்கு அங்கிருந்த பிராமணர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவரது தாயின் உடலுக்கு தீ மூட்டவும் இல்லை. தனது மந்திர வலிமையால் தாயின் உடலுக்கு தீ மூட்டினார்சங்கரர்.
மீமாம்ஸ சித்தாந்தத்தில் தலை சிறந்தவர் மண்டன மிஸ்ரர். அவரோடு வாதிட்டு அவரை சங்கரர் வென்ற கதை நாம் அறிந்ததே. மண்டன மிஸ்ரர் வயதில் பழுத்தவர். சங்கரரோ இளையவர். மிஸ்ரர் அனுபவசாலி. பலவும் கற்றவர். எனவே சங்கரர் அவரோடு வாதிட வந்த போது அவர் முதலில் தயங்கினார். இந்த வாதத்திற்கு நடுவரை சங்கரரையே தேர்ந்தெடுக்க சொன்னார்.
சங்கரரும் மிஸ்ரரின் மனைவி பாரதியை நடுவராக தேர்ந்தெடுத்தார். வாதம் ஆரம்பமானது. ஆறு மாதங்கள் தொடர்ந்தது. மிஸ்ரர் எவ்வளவுதான் கல்வி கேள்விகளில் சிறந்து இருந்தாலும் அவரால் சங்கரரின் அறிவு கூர்மைக்கும் ஆத்ம ஞானத்திற்குமுன் ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் தனது தோல்வியை ஒத்துக் கொண்டார். ஆனால் பாரதியோ சங்கரர் தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும் என உரைத்தார்.
அவர்கள் இருவருக்கும் நடந்த வாதத்தில் பாரதி திருமண வாழ்க்கை சம்பந்தமான கேள்விகளை கேட்டார். சங்கரரோ கட்டை பிரம்மச்சாரி. துறவி வாழ்க்கை வாழ்பவர். இதை அறிந்தே பாரதியும் அவரிடம் இல்லற வாழ்க்கை குறித்து வினாவினார். சங்கரரை இந்த வாழ்க்கை பகுதியை அறிந்து வருமாறு பாரதி அனுப்பினார். ஒரு ராஜா இறக்கும் தருவாயில் இருப்பதை அறிந்த சங்கரர் தனது சக்தியால் அவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார். இல்லற வாழ்வின் சூக்ஷ்மங்களை ராஜாவின் மூலம் அறிந்துகொண்டு பாரதியின் கேள்விகளுக்கு விடை அளித்தார்.
நாடெங்கும் இந்து மதத்தின் மகத்துவத்தையும், அத்வைதத்தின் சிறப்பையும் எடுத்து கூறி வந்த சங்கரர் பல பண்டிதர்களோடு விவாதங்களில் ஈடுபட்டார். அதிலும் மீமாம்ச கொள்கைவாதிகளோடு அதிகமாக தர்க்கம் செய்தார். மீமாம்ச பிரிவை சேர்ந்தவர்கள் சம்பிரதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சன்யாச வாழ்கையை ஏற்காதவர்கள். அவர்களின்முன் சன்யாச தர்மத்தின் சிறப்பை எடுத்து காட்டும் வகையில் தசநாமி தர்மத்தை போதித்தார். ஷண்மத சித்தாந்தத்தை நெறிப்படுத்தினார்.
ஆதி சங்கரர் இந்து மதத்தை தழைக்க செய்யவும் அத்வைத சித்தாந்தத்தை வலியுறுத்தவும் இந்தியாவின் நான்கு திக்குகளிலும் நான்கு மடங்களை நிறுவினார். அதற்கு தனது பிரதம சிஷ்யர்களுக்கு தலைமை பொறுப்பு கொடுத்தார். இந்த நான்கு மடங்களின் பெயர்கள்
கர்நாடகத்தில் உள்ள சிருங்ககிரி சாரதா மடம்,
பத்ரிநாத் அருகே உள்ள ஜோதி மடம்,
த்வாரகாவில் உள்ள சாரதா மடம்
பூரியில்உள்ளகோவர்தனமடம் ஆகும்
சங்கரரின் சிஷ்யர்களில் ,பத்மபாதர், ஹஸ்தமலகர், தோடகர், சுரேஷாசார்யர் ஆகியோர் தங்களின் எழுத்துதிறமைக்காக போற்றப்படுகிறார்கள்
நான் வேறு நீ வேறு இல்லை.நாமிருவரும் பரப்ரமத்தின் ஸ்வரூபங்கள். நம்முள் இருக்கும் ஜீவனே சத்தியம். மற்றவை எல்லாம் மித்யம் (பொய்). இதுவே அத்வைத சித்தாந்தத்தின் சாரம். ஜீவனும் பரமனும் வேறு இல்லை.
பரமாத்மா இந்த அண்டம் முழுவதும் வ்யாபித்து உள்ள ஒன்று. அதனை எங்கும் எப்போதும் உணரலாம். இந்த விழிப்புணர்வை தடுக்கும் சக்தியே மாயை அல்லது சம்சாரம் என்னும் வலை. இந்த மாயையில் இருந்து விடுபட ஞானம் தேவை. அந்த ஞானம் வித்தையின் மூலம் கிடைக்கிறது. அதன் மூலம் நாம் நம்முள் இருக்கும் பரமாத்மனை அறிந்து நாமும் அதனோடு ஒன்றானதே என்பதை அறிவோம்.
சங்கரர் பக்தி, கர்ம யோகங்களின் சிறப்பை மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை அத்வைத வழிப்படுத்தினார்.
ஆதி சங்கரர் எழுதிய நூல்களில் பிரம்மசூத்திர பாஷ்யம் சிறப்புள்ளது. பகவத் கீதை மற்றும் உபநிஷத்துகளுக்கு அவர் எழுதி உள்ள உரைகள் பெயர் பெற்றவை. மற்றும் சங்கரரின் விவேகசூடாமணி சௌந்தர்யலஹரி, சிவானந்தலஹரி, நிர்வாண சதகம், கனகதாரா ஸ்தோத்திரம், பஞ்சிகரணம், ஆத்மபோதனை ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.
சங்கரரின் தெளிவான எழுத்து நடையும், ஒரு விஷயத்தை இயல்பாக அணுகும் முறையும் அவரின் எழுத்துக்கு பெருமை சேர்க்கின்றன. அவரின் கருத்துக்கள் மகாயான புத்த சமய கொள்கைகளோடு ஒத்து இருக்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள்
சங்கரரின் வாழ்க்கையே ஒரு பொக்கிஷம். கடைசியாக இமய மலை சென்று ஸர்வஜன பீடத்தை அலங்கரித்து தனது 32ம் வயதில் இமய மலையில் மறைந்த தத்துவ ஞானி அவர்.
சங்கர ஜெயந்தி சங்கரரின் பிறந்த தினத்தை கொண்டாடுவது. சித்திரை மாதம் வளர் பிறை பஞ்சமி திதி அன்று வருவது. சங்கரரின் உருவ படத்தை வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்று அதன் பின் வேத கோஷங்களுடன், சங்கரரின் அஷ்டோத்திரம், நாமாவளி ஆகியவற்றை சொல்லி வீதி உலா சென்று அவரை பணிந்து துதிப்பது வழக்கம். அக்காட்சி சங்கர பக்தர்களும் கண்டு களிக்க வேண்டிய காட்சியாகும்.
சங்கரரை போற்றுவோம். அத்வைதத்தின் புகழ் பாடுவோம். இந்து மதத்தை பேணிக் காப்போமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply