சூரியனின் சக்தியினால் உலகம் இயங்குகிறது என்பது நாம் அறிந்த உண்மை. அந்த சூரிய சக்தியை வணங்கும் முகமாக அமைந்த ஒரு நாளே ரதசப்தமி. தை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியை நாம் ரதசப்தமி என கூறுகிறோம்.
சப்தமி என்பது ஏழு (7) என்ற எண்ணைக் குறிக்கும். சூரியனின் தேர் ஏழு குதிரைகளால் பூட்டப்பட்டது. அருணனால் செலுத்தப்படுவது. ஏழு குதிரைகள் சூரியனின் சக்தியை காட்டுகின்றன.ஏழு வானவில்லின் நிறங்களைக் குறிக்கும் மற்றும் வாரத்தின் நாட்களைக் குறிக்கும். வாரம் சூரியனின் தினமான ஞாயிற்றுக் கிழமையோடு துவங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.சூரியனின் தேரில் 12 சக்கரங்கள் உண்டு. அவை 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிப்பதாகும்.
ரதம் என்றால் தேர். இங்கு அது சூரியனின் தேரைக் குறிக்கும். சப்தமி என்பது ஏழாவது தினம். சூரியன் தன் தேர்க்காலை வடக்கு நோக்கி நகர்த்தி கொண்டு செல்வதைக் குறிக்கும் விதமாக ரதசப்தமி அமைந்துள்ளது. மகர சங்கராந்தி அன்று தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு கடக்கும் சூரியன் தனது வடக்கு திசை நோக்கிய பயணத்தை துவக்குகிறார். இதன் மூலம் வசந்தத்தையும் கோடையையும் உலகிற்கு கொண்டு வருகிறார். இதனை குறிக்கும் வகையில் நாம் ரதசப்தமி கொண்டாடுகிறோம்.
ரதசப்தமி, சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன், காசியப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர். இந்த நாளை சூரிய ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். விஷ்ணுவின் அம்சமாக சூரியனை கருதுவதால் விஷ்ணுவையையும் இந்த நாளில் சூர்ய நாராயணன் என வணங்குகிறார்கள்.
ரதசப்தமி அன்று அதிகாலையிலேயே நீராடி, சூரியனைப் போற்றி சூர்ய அஷ்டகம், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.
நீராடும்போது, ஏழு எருக்கு இலைகளையும் அவற்றில் சிறிது அக்ஷதையும் சேர்த்து உடலில் வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.
தலையில் ஒன்று, தோள்களில் இரண்டு, கைகளில் இரண்டு மற்றும் கால்களில் இரண்டு வைத்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் மேம்படும் என்பது நம்பிக்கை.
தந்தை இல்லாதவரும் கணவனை இழந்தோரும் அரிசியும் எள்ளும் தலை மேல் வைத்து குளிக்க வேண்டும்.
அதிகாலையிலேயே ஸ்நானம் செய்வது உத்தமம்.
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ
நெளமி ஸப்தமி ! தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம் வ்யபோஹய !
இப்படி செய்தால் நமது ஏழு ஜன்மத்து பாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதற்காக சூரிய பகவானை வேண்டி நீரினால் அர்க்யம் விட வேண்டும். இந்த நாளில் பால், சர்க்கரைப்பொங்கல் மற்றும் வடையை நைவேத்யமாக படைப்பார்கள்.
”ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்4ய ப்ரதா3னம் கரிஷ்யே” என்று சங்கல்ப்பம் சொல்லி விட்டு
*திவாகராய நம: [நமஹா] இதமர்க்யம்;
*திவாகராய நம: [நமஹா] இதமர்க்யம்;
என்று மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தால் ஸூர்யனுக்கு மூன்று முறை அர்க்யம் விடவேண்டும்.
வீட்டு வாசலில் சூரிய ரதம் வரைந்து அதற்கு சந்தனம் குங்குமம் பூக்கள் கொண்டு தொழுதால் சூரிய அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எருக்குக்கு சூரியனின் சக்தியை பிரதிபலிக்கும் தன்மை உண்டு. எருக்க இலையை நம் தலை மேல் வைத்து குளிக்கும் போது நமது சக்தியும் அதிகரிக்கிறது. எருக்கை‘அர்கா’ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வார்கள். இந்தச் சொல் சூரியனுக்கும் பொருந்தும். இந்த நாளில் தானம் கொடுப்பதும், புது தொழில் ஆரம்பிப்பதும் நலம் தரும் எனக் கருதப்படுகிறது.
மகாபாரதத்தின் தலை சிறந்தமனிதர், மாவீரர் பீஷ்மர், சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தை எதிர்பார்த்து உயிர் நீக்காது அம்புப் படுக்கையில் இருந்தார். இது குருக்ஷேத்ர போரில் நடந்த சம்பவமாகும். உத்தராயண காலத்தில் உயிர் துறக்க சித்தம் கொண்டிருந்த அவர், 48 நாள் காத்திருந்து ரதசப்தமிக்கு மறு தினம் அஷ்டமி திதியில் உயிர் நீத்தார்.
அவரைக் காண வந்த வியாச மாமுனிவர், அவரின் பாபம் தொலைய, எருக்கு இலை கொண்டு உடலைமூடிக் கொள்ள உபதேசித்தார். பீஷ்மரும் அவ்வண்ணமே செய்து தனது பாபம் தொலைத்து உயிர் நீத்தார். இதனால் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, ரதசப்தமி அன்று அவருக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உண்டு. எருக்கு இலை வைத்து ஸ்நானம் செய்து, தத்தம் பாபத்தை போக்கிக் கொள்ளும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
ரதசப்தமி அன்று திருப்பதியில் அர்த்த பிரம்மோத்சவம் நடைபெறுகிறது. ஏழுமலையானின் ஏழு மலைகள் சூரியனின் ஏழு குதிரைகளுக்கு ஒப்பாக இருப்பதால் ரதசப்தமி அன்று, வெங்கடாசலபதி, ஏழுவாகனங்களில், ஒரே நேரத்தில், காலை பொழுதில் பவனி வரும் காட்சி கண் கொள்ளாதது.
காம்போஜ தேசத்தின் அரசனான யஷோவர்மா ரதசப்தமியின் சிறப்பை எடுத்துரைக்கும் கதையை குறிப்பிடுகிறான். அக்கதையின்படி, மழலைச்செல்வம் இல்லாத அரசன் ஒருவன், இறைவனிடம் வேண்டி ஒரு ஆண்மகவைப் பெற்றான். அந்த குழந்தையோ மிகவும் நோய்வாய்ப்பட்டது. அங்கு வந்த முனிவர் ஒருவர் ரதசப்தமி பூஜை செய்தால் இந்த நோய் தீர்ந்து அந்த பையன் சுகமாவான் எனக் கூற, இளவரசனும் அதே போல் பூஜை செய்து நோய் நீங்கி சுக வாழ்வு வாழ்ந்தான். ரதசப்தமி அன்று சூரியனை வழிபடுவது அவ்வளவு சிறப்பு மிக்கது
ரதசப்தமியன்று சூரிய கடவுளை வணங்குவதால், நமது ஏழு ஜன்ம பாபம் தொலைந்து வரும் நாட்களில் நன்மை பெருகும்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply