உத்பன்ன ஏகாதசி ஐப்பசி கிருஷ்ண பக்ஷத்தில் வருகிறது. இந்த வருடம் நவம்பர் 14 ம் தேதி அன்று வருகிறது. இதற்கு உற்பத்தி ஏகாதசி எனவும் பெயருண்டு. முதல் முறையாக ஏகாதசி விரதமிருக்க நினைப்பவர்கள் உத்பன்ன ஏகாதசி அன்று விரதத்தை ஆரம்பிக்க வேண்டுமென ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனருக்கு பவிஷ்ய உத்தர புராணத்தில் கூறுகிறார்.
சத்ய யுகத்தில் முரன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் மிகுந்த வலிமை கொண்டவன். தேவர்களையும்,ஏனைய கடவுளரையும் வென்று உலகையே தனது வசம் ஆக்கிக் கொண்டான். இந்திரனை வென்று, அவரை இந்திரலோகத்தை விட்டு விரட்டினான். இந்திரனும், தேவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள். சிவன் முரனை அழிக்க விஷ்ணுவால் தான் முடியும் என்றும், அவரிடம் சென்று முறையிடுமாறும் இந்திரனையும் தேவர்களையும் பணித்தார்
தேவர்களும், இந்திரனும் அவ்வண்ணமே விஷ்ணுவிடம் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அவரும், அவர்களோடு முரனின் தலைநகரமாம் சந்திரபதிக்கு சென்றார். முரனோடு நீண்ட காலம் போர் புரிந்த விஷ்ணு பகவான் இறுதியில் அவனோடு மல்யுத்த சண்டையில் இறங்கினார். யுத்தம் நீண்டு கொண்டே போவதை கண்ட விஷ்ணு அந்த இடத்தை விட்டு நீங்கி பத்ரிகாஷ்ரமம் சென்றார். அங்கே ஹிமவதி குகைக்குள் சென்று உறங்கி விட்டார்.
விஷ்ணுவைத் தொடர்ந்து வந்த முரன், அவர் குகைக்குள் உறங்குவதைக் கண்டான். அவரை அழிக்க எண்ணம் கொண்டான். அவனின் தீய எண்ணத்தை அழிக்க விஷ்ணுவின் யோக மாயையிலிருந்து ஒரு பெண் உருவம் தோன்றியது. அந்த பெண் உருவம் வலிமை மிகுந்ததாக இருந்தது. முரனோடு போரிட்டு, அவன் நெஞ்சில் காலை வைத்து அவன் தலையைக் கொய்தது.
தேவர்களும் ஏனைய கடவுளரும் அவளின் பராக்ரமத்தை புகழ்ந்து கொண்டு இருந்தனர். உறக்கத்தில் இருந்து எழுந்த விஷ்ணு தனது முன் நிற்கும் பெண் உருவத்தைப் பார்த்தார் விஷ்ணு தனது யோகமாயையிலிருந்து ஐப்பசி மாத தேய்பிறையின் 11வது நாள் தோன்றியமையால், அந்த பெண் சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். அவள் வேண்டும் வரம் அருளுவதாக உரைத்தார்.
ஏகாதசி அதற்கு,
“ஐயனே! இந்த ஏகாதசி நாளில் உங்களை வணங்கி விரதமிருப்பவர்களுக்கு உலகில் எல்லா நலன்களும் கிடைக்க அருள வேண்டும். இறுதியில் அவர்களுக்கு மோக்ஷ பலனும் கிட்ட வேண்டும். இந்த ஏகாதசி தினத்தன்று எல்லோரும் எப்போதும் உங்களைப் போற்ற வேண்டும். ஏகாதசி அன்று ஒரு வேளை உணவு உண்பவருக்கு முழுவதும் விரதம் இருப்பவருக்கு கிடைக்கும் பலனில் பாதிப் பலன் கிடைக்க வேண்டும். இந்த வரங்களை அருள்வீர்களாக.”
எனப் பதில் உரைத்தாள்.
விஷ்ணுவும் அவ்வண்ணமே வரம் அளித்தார்:
“இந்த ஏகாதசி தினம் மூவுலகினராலும் எப்போதும் போற்றப்படும்.இந்த நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்கள் சகல பாபங்களும் நீங்கப் பெறுவார்கள்.வாழ்வின் சுக போகங்களை அனுபவித்து ,இறுதியில் என் திருவடி நிழலில் வந்து சேர்வார்கள்.” என உரைத்தார்.
அன்றிலிருந்தே ஏகாதசி விரதம் இருக்கும் பழக்கம் வந்தது.
உத்பன்ன ஏகாதசி விரதமிருப்பவர்கள் தங்கள் பாபங்களிலிருந்து விடுபடுவார்கள்.
புனித ஸ்தலங்களில் ஸ்நானம் செய்த பலனைக் காட்டிலும் அதிக பலன் பெறுவார்கள்.
சங்கராந்தி அன்று தானம் கொடுத்த பலனைப் பெறுவார்கள்.
ஒரு ஆயிரம் பசுக்களை தானம் செய்ததை விட அதிகப் பலனைப் பெறுவார்கள்.
உத்பன்ன ஏகாதசி விரதமிருந்தால் அஸ்வமேத யாகம் செய்ததை விட 100 மடங்கு அதிகப் பலன் கிடைக்கும்.
சூரிய கிரகணத்தன்றோ அல்லது சந்திர கிரகணத்தன்றோ குருக்ஷேத்திரத்தில் தானம் கொடுத்ததை விடப் பலன் அதிகம் கிடைக்கும்.
இத்தகைய உத்பன்ன ஏகாதசி அன்று நாமும் ஏகாதசி விரதம் துவக்கி பயன் பெறுவோமே!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply