காரடையான் நோன்பு தமிழருக்கான நோன்பு. மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்டிர் தங்கள் இல்லத்தரசர்கள் நீண்ட நாள் வாழ வேண்டி விரதமிருந்து நோன்பு நூற்று மஞ்சள் சரடு கட்டிக் கொண்டு கௌரி அம்மனை வேண்டும் பண்டிகை இது. மணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டி விரதமிருக்கும் நாளிது.
காரடையான் நோன்பு சூரியன் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு நகருவதை குறிக்கும் முகமாகவும் அமைகிறது.
2017 வருடத்தில் என்று காரடையான் நோன்பு அனுசரிக்கப்படுகிறது?
2017 வருடத்தில் காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14ம் தேதி அன்று வருகிறது. மாலை 4.35லிருந்து 5.௦௦ வரை நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காரடையான் நோன்பு செவ்வாயன்று நிகழ்வதால் (ராகு காலம் 3 to 4.30 PM ) , மாலை 4.30க்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னதாகவே தயார் செய்து வைத்துக் கொண்டு, மாலை 4.30 to 4.45க்குள் (புதஹோரையில்) பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள வேண்டும். மாலை 4.50 ஐத் தாண்டக் கூடாது. ஏனெனில் 4.53 க்கு பங்குனி மாதம் பிறந்துவிடும்.
காரடையான் நோன்பு எப்போது கொண்டாடப்படுகிறது?
காரடையான் நோன்பு மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் செய்யப்படுகிறது. அது எந்த வேளையாக இருந்தாலும், நடு இரவாக இருந்தாலும் அந்த வேளையிலேயே அனுசரிக்கப்பட வேண்டும்.
காரடையான் நோன்பு நூற்பது எப்படி?
மாசியும் பங்குனியும் கூடும் நேரம் வரை காலை சூரிய உதயத்தில் இருந்து விரதமிருப்பர் பெண்டிர். கார அரிசியால் செய்த இனிப்பு அடையும் உப்பு அடையும் அம்மனுக்கு நெய்வேத்யமாகப் படைப்பார்கள். சங்கல்பம் எடுத்து காமாக்ஷி பூஜை செய்வாரும் உண்டு .
உங்களுக்காக சங்கல்ப ஸ்லோகம் இதோ
சங்கல்பம்
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
த்யானம்
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் புவனேஸ்வரீம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
நோன்புச்சரடு மந்திரம்
தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா
மஞ்சள் சரடு கொண்டு தோரக பூஜை செய்து அதை கழுத்தில் கட்டி கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணையும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'
இந்தகாரடை நைவேத்யமே மற்றவர்களுக்கு பிரசாதமாக அமைகிறது. பெண்கள் மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் மாங்கல்ய சரடு கட்டி கௌரி அம்மனை வேண்டி காரடை நெய்வேத்யம் செய்து அதனை உண்டு தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள்.
காரடையான் நோன்பிற்கு சாவித்திரி விரதமென்ற பெயருண்டு. ஏன் என்று தெரிய வேண்டுமா?
சாவித்திரி சத்தியவான் கதை
சாவித்திரி அரசபதி என்ற அரசனின் பெண். அருகிலுள்ள காட்டில் வசிக்கும் சத்யவானின் பித்ரு பக்தியையும், அவர் தாய் தந்தைக்கு பணிவிடை செய்யும் நேர்த்தியையும் பார்த்து அவரிடம் காதல் கொண்டாள். அவரை மணக்க தந்தையிடம் அனுமதி வேண்டினாள்.
அரசபதி முதலில் மறுத்தாலும் பின் அவளின் பிடிவாதத்திற்கு விட்டுக் கொடுத்தார். இத்தனைக்கும் சாவித்திரி நாரதர் மூலம் சத்யவானின் அல்பாயுசு பற்றி அறிந்தவளே. மறு வருடம் இறக்கப் போகிறார் சத்யவான் என அறிந்தவள்.
சரி, என்ன நடந்தது தெரியுமா? சாவித்திரி திருமணத்திற்கு பின் தனது மாமனார் அரசராக இருந்தவர், விதி வசத்தால் பதவி இழந்தவர் என்பதை தெரிந்து கொண்டாள். குடும்பத்திற்கு பணிவிடை செய்து கணவனையும் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வந்தாள். சாவித்திரி கௌரி அம்மனை பூஜித்து வந்தாள். அருகம் புல்லும் அரச இலையும் கொண்டு அம்பாளை தொழுது வந்தாள். மற்றும் கார அரிசியால் துவரம் பருப்பு சேர்த்து சமைத்த உணவை அம்பாளுக்கு நெய்வேத்யமாகப் படைத்தாள். (இதனால் தான் காரடை நெய்வேத்யம் செய்யும் பழக்கம் வந்தது.)
மறு நாள் சத்தியவானுக்கு எமன் கெடு வைத்திருந்த நாள். சாவித்திரி தனது கணவனை பின் தொடர்ந்து காடு சென்றாள். விறகு வெட்டிக் கொண்டிருந்த சத்யவான் திடீரென மயக்கமடைந்தான். அது அவனது வாழ்வின் இறக்கும் நேரம். எமன் சத்யவான் முன் தோன்றி அவனது உயிரை பாசக் கயிற்றால் எடுத்து செல்ல, சாவித்திரி எமனிடம் மன்றாடினாள். எமனைப் பின் தொடர்ந்து சென்றாள். முதலில் சாவித்திரியின் வேண்டுதலை புறக்கணித்த எமன் அவளது கடும் பிரயத்தினத்திற்கு மனம் இறங்கினார். சத்யவான் உயிரைத் தவிர வேறு வரங்கள் தருவதாக வாக்களித்த எமன் அவளுக்கு மூன்று வரங்கள் அருள மனமிரங்கினார்.
முதல் வரம் என்ன தெரியுமா? தனது தந்தைக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டுமெனக் கேட்டாள் சாவித்திரி. இரண்டாவதாக தன் மாமனார் இழந்த ராஜ்யத்தை மீண்டும் அடைய வேண்டுமென கேட்டாள். மூன்றாவதாக தனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டுமெனக் கேட்டாள். அந்த பதிவிரதைக்கு சத்யவான் உயிரோடு திரும்பினால் தானே குழந்தை பிறக்கும். வரத்தை அருளிய பின்னே எமன் அவளின் மதி யூகத்தை உணர்ந்தார். அவளின் கணவன் பக்தியையும் தெய்வ பக்தியையும் மெச்சிய அவர், சாவித்திரி கார அரிசி கொண்டு கெளரி அம்மனுக்கு நெய்வேத்யம் படைத்து தொழுதமையாலேயே அவளுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்தது எனவும் கூறினார்.
காரடை நோன்பு இருந்து கௌரி அம்மனையும் சாவித்ரியையும் வேண்டினால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கும் என்பது உண்மைதானே. திருமணமாகாத பெண்களும் சாவித்திரி விரதம் இருக்கிறார்கள். நல்ல கணவன் கிடைத்து அருமையான இல்லற வாழ்வு அமைய கௌரி அம்மனிடம் வேண்டுகிறார்கள்.
காரடையான் நோன்பு சௌபாக்ய கௌரி விரதம் என்று ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. கர்வ சாவத், ஜித்திய விரதம், கங்கார் விரதம், வாட் சாவித்திரி விரதம் என்று வடக்கிந்திய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது.
சாவித்திரி விரதமிருந்து கணவனுக்கு நீண்ட ஆயுளையும், குடும்பத்திற்கு வளத்தையும் பெற்று மகளிர் சிரோன்மணிகளாகத் திகழ்வீர்களாக!
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply