கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி அன்று பிறக்கிறது. டிசம்பர் 15 வரை இருக்கிறது.
இந்த மாதம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனின் வழிபாட்டிற்கு ஏற்றதாகும்.
கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்களால் விரும்பப்படும் மாதம். மாலை அணிந்து, 41 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து அவர் அருள் பெறுவார்கள்.
கார்த்திகை மாதத்தின் திங்கட் கிழமைகளில் சோம வார விரதம் இருப்பது வழக்கம். சிவனுக்கு உகந்த பூஜை இது.
திருக்கார்த்திகை அன்று தீப ஒளியால் வீட்டினை அலங்கரிப்பார்கள். ஆனால் கார்த்திகை மாதம் பிறந்தது முதலே ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டின் முன் விளக்கேற்றி வைப்பது வழக்கமாக உள்ளது
கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா விப்ரா
"புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுசான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் சரி, எதுவானாலும் சரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்" என்று இந்த சுலோகத்துக்கு அர்த்தம்
.
நெல்லிக்காய் மரத்தினை கார்த்திகை மாதம் வணங்குவது நல்லது. நெல்லி மரத்தில்தான் இந்த மாதம் கடவுளரும், சாதுக்களும் தங்கி இருப்பதாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலர் கோயிலை கிரி வலம் வருவது விசேஷம்.
17/11/2017- மாதப் பிறப்பு- கார்த்திகை மாதப் பிறப்பு ஐயப்ப பக்தர்களுக்கு விசேஷமான ஒன்று. அன்றுதான் ஐயப்ப பக்தர்கள் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து, இருமுடி கட்டி, விரதத்தை ஆரம்பிக்கிறார்கள், விரத முடிவில், ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குப் பயணம் மேற் கொள்கிறார்கள்.
17/11/2017- முடவன் முழுக்கு- கார்த்திகை மாதத்தின் முதல் நாள் காவேரியில் ஸ்நானம் செய்தால் துலா ஸ்நானம் செய்ததின் பலன் கிடைக்கும். முடவன் முழுக்கு என்று எப்படிப் பெயர் வந்தது தெரியுமா? ஒரு முடவன் துலா ஸ்நானம் செய்ய காவேரிக்கு ஐப்பசி முடிந்து கார்த்திகை முதல் நாள்தான் சென்றான். அவனது அங்கஹீனத்தால் அவனால் ஐப்பசிக்குள் துலா ஸ்நானம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவனது பக்தியை மெச்சி இறைவன் அவனுக்கு துலா ஸ்நானத்தின் பலனான மோக்ஷத்தை அருளினார். இதனாலேயே இந்த நாளுக்கு முடவன் முழுக்கு எனப் பெயர் வந்தது .
18/11/2017 – கார்த்திகை அமாவாசை - கங்கா ஸ்னான உத்சவம்- கார்த்திகை அமாவாசை அன்று ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு. இதற்கு கங்கா ஸ்நான உத்சவம் என்று பெயர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.
ஸ்ரீ அய்யாவாள் பஜனை சம்பிரதாயத்தில் போற்றப்படும் மனிதர். ஒரு நாள் அவர் தனது வீட்டில் ஸ்ரார்த்தத்திற்கு சமைத்த உணவை பசித்திருந்த ஒருவனுக்குக் கொடுத்து விட்டார். மறுபடியும் உணவு சமைத்தார். ஆனாலும் பிராமணர்கள் அவர் வீட்டில் சாப்பிட மறுத்துவிட்டார்கள். மறு வருடம், அவர் ஸ்ரார்த்தத்திற்கு அழைத்த போது, அழைப்பை மறுத்த பிராமணர்கள் ஸ்ரீ அய்யாவாள் கங்கையில் குளித்தால்தான் அவரது பாபத்திற்கு பரிகாரம் கிடைக்கும் எனக் கூறினார்கள். அய்யாவாள் அவர்களால் வயதான காலத்தில் வட இந்தியா வரை சென்று கங்கையில் குளிக்க முடியாது. மாறாக அவர் தனது வீட்டில் இருக்கும் கிணற்றில் கங்கையை வரவழைத்தார். இந்த நிகழ்ச்சி கார்த்திகை மாதம் அமாவாசை அன்று நடைபெற்றது. இதனால் இந்த அமாவாசை அன்று அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் இருக்கும் நீரில் குளிப்பதை விசேஷமாகக் கருதுகிறார்கள்.
1/12/2017 - மகா பரணி தீபம்- மகா பரணி தீபம் கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரம் வரும் அன்று கொண்டாடப்படுகிறது. மாலையில் வீட்டின் வெளியே விளக்கேற்றி கொண்டாடுகிறார்கள். சொக்கப்பானை கொளுத்தி மகிழ்வது இந்த நாளின் விசேஷமாகும்.
2/12/2017 - திருக் கார்த்திகை தீபம்- கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரும் அன்று வீடெங்கும் விளக்கேற்றி சிவனையும், முருகனையும் வணங்குகிறார்கள். திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலரின் கோயிலில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுவதை தரிசிப்பது விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இத்தனை நல்ல விஷயங்கள் கார்த்திகை மாதத்தில் இருக்கும் போது அந்த மாதத்தை சிறப்பாகக் கொண்டாடலாமே?
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply