குரு பூர்ணிமா ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியைக் குறிக்கிறது. இந்த நாள் குரு சிஷ்ய பரம்பரையை கடைப்பிடிப்போரால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
ஆன்மிகக் குருவின் அருளின்றி எந்த ஒரு மனிதனாலும் முக்தியை அடைய முடியாது. அத்தகைய குருவிற்கு வந்தனை செய்ய வேண்டியதின் கட்டாயத்தை உணர்த்தும் வகையில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
சம்ஸ்கிருதத்தில் ‘கு’ என்றால் இருட்டு எனப் பொருள்.’ரு’ என்றால் விரட்டுதல் எனப் பொருள்.அறியாமையாகிய இருட்டை விலக்கி ஞான ஒளியினை ஏற்படுத்துபவரே குருவாவார். ஒரு சிஷ்யனின் வாழ்க்கை பாதையை சீர் செய்து அவனுக்கு ஞான ஒளி ஏற்படுத்தி அவனை மோக்ஷம் பெறுமளவிற்கு கொண்டு செல்பவர் குருவாவார் .
இத்தகைய குருவிற்கு நன்றி செலுத்தும் வகையில் சிஷ்யன் அவர் பாதம் வணங்கி, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து அவரை வணங்கி துதிப்பதற்காக ஏற்பட்டதே குரு பூர்ணிமா.
குரு பூர்ணிமா அன்று மத குருக்களுக்கு சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது.
தனது ஆன்மீக குருவை தேடிக் கொண்ட ஒருவன் அவருக்கு வந்தனம் செய்கிறான். அவரது பாதம் தொட்டு அவரது நல்லாசிகளை பெறுகிறான்.
கல்வி உலகில் குரு பூர்ணிமாவிற்கு சிறப்பிடம் உண்டு. இந்த நாளில் ஒரு மாணவன் தன்னை கற்பிக்கும் ஆசிரியர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் போற்றி வணங்குகிறான்.
நடனம், சங்கீதம் ஆகியவற்றை கற்பவர்கள் குரு சிஷ்ய பரம்பரையை பின்பற்றுபவர்கள். இவர்கள் இந்த நாளை விசேஷமாக கொண்டாடுகிறார்கள்.
குரு பூர்ணிமாவிற்கு வியாச பூர்ணிமா என்றும் புத்த பூர்ணிமா என்றும் பெயர் உண்டு. என்ன காரணம்?
வேத வியாசரை அறியாதவர் இல்லை. நான்கு வேதங்களை தொகுத்தவர். மகாபாரதத்தை எழுதியவர். அதில் ஒரு கதாபாத்திரமாக விளங்குபவர். ஸ்ரீமத் பாகவதம் உட்பட்ட 18 புராணங்களை எழுதியவர். பிரம்ம சூத்திரம் புனைந்தவர். இந்தகைய பெரியோனின் பிறந்த தினமே குரு பூர்ணிமா. இந்த நாளில் வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன]
குரு பூர்ணிமா அன்றே வியாசர் பிரம்ம சூத்திரத்தை எழுதி முடித்தார். இந்த நாளில் பிரம்ம சூத்திரத்தை பாராயணம் செய்து வியாசரை வேண்டினால் இம்மையில் நல்லறிவு உண்டாகும்.
புத்தர் துறவறம் பூண்ட பின் சாரநாத் சென்று முதல் முறையாக தனது சிஷ்யர்களுக்கு அருளுரை ஆற்றிய நாள் குரு பூர்ணிமா ஆகும். இதனால் குரு பூர்ணிமா புத்த பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவோரால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. புத்த ஆலயங்களில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறுகின்றன
யோக சாஸ்திரத்தின்படி சிவனார் ஆதிகுரு ஆவார். யோக சாஸ்த்திரத்தின் ஏழு வகைகளை சிவனே இமய மலையில் சப்தரிஷிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இதை பற்றி ஒரு கதை உண்டு.
முன்பொரு காலத்தில் சிவன் இமய மலையில் ஒரு யோகியாக தோன்றி ஆழ்ந்த த்யானத்தில் ஈடுபட்டார். அவரின் தெய்வீக தோற்றம் எல்லா மக்களையும் அவர்பால் ஈர்த்தது. ஆனால் அவர்தம் மோன நிலை கலையாமல் நின்றதனால் மக்கள் கலைந்து சென்றனர்.மிஞ்சி நின்றது ஏழு ரிஷிகளே .அவர்கள் சப்தரிஷிகள் என அழைக்கப்பட்டவர்கள். அவர்கள் சிவனாரை போல் தாங்களும் மோன நிலைக்கு செல்ல வேண்டுமென விழைந்தார்கள். அவர்களின் விண்ணப்பத்தை முதலில் நிராகரித்த சிவன் அவர்களின் விடாத ஈடுபாட்டினால்,நிர்பந்தத்தினால் அவர்களுக்கு யோக கலையை கற்பித்தார். அவர் கற்பிக்க ஆரம்பித்தது பௌர்ணமி நாளில். இந்த ஏழு ரிஷிகளும் யோக கலையை கற்பித்து உலகெங்கும் அதை கொண்டு செல்ல காரணமானார்கள் .
எனவே சிவன் யோகம் கற்பவர்களுக்கு ஆதி குரு என அழைக்கப்படுகிறார். அதனால் யோக சாஸ்திரம் கற்பவர்கள் இந்த நாளில் அவருக்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.
குரு பூர்ணிமா அன்று குருவின் இருப்பிடம் சென்று அவரது பாதம் வணங்கி நல்லாசி பெறுகிறார்கள்.
குருவின் அருளுரைகளை மனதில் கொண்டு அதனை சிந்திப்பதில் மனதை செலுத்துகிறார்கள்.
குருவின் ஆலயங்களுக்கு சென்று விசேஷ பிரார்த்தனை மேற்கொள்ளுகிறார்கள்.
சாதுர் மாசிய (நான்கு மாத) விரதமிருக்கும் சன்யாசிகள் இந்த கால கட்டத்தில் ஒரே இடத்தில் தங்கி த்யானம், சத்சங்கம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
சன்யாசம் வேண்டும் ஆன்மீகவாதிகள் இந்த நாளை சன்யாசம் மேற்கொள்ள தேர்ந்து எடுக்கிறார்கள் .
இன்று உபவாசம் இருந்து குரு சிந்தனையில் காலம் கழிப்பது வழக்கம்.
ஆன்மிகவாதிகள் மேலும் பல குறிக்கோள்களை இந்த நாளில் நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்ற உறுதி எடுக்கிறார்கள்.
நடனம் சங்கீதம் பயில்வோர்கள் தங்கள் குருக்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்துகிறார்கள்.
கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க குரு பூர்ணிமாவை நாமும் கொண்டாடி, நமக்கு ஆன்மிக ஒளி அளிக்கும் நமது குருக்களின் பாதம் பணிந்து, வாழ்வில் உன்னதி அடைவோமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply