கோகுலாஷ்டமி வைபவம் ஆகஸ்ட் 14, 2017, திங்கட்கிழமை
கோகுலாஷ்டமி கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடுவது.இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது. ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, தஹி ஹாண்டி, ராஸலீலா என்ற பெயர்களால் கொண்டாடப்படுவது.
ஒரு குழந்தையின் குறும்புகளில் உலகின் பெரிய தத்துவங்களை உள்ளடக்கி காட்டியவர் கிருஷ்ணர். சிறு குழந்தையாக அவரை தத்தம் வீட்டில் வரவேற்க நாம் அனைவரும் தயாராகும் நாளே ஜன்மாஷ்டமி. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவர் கிருஷ்ணர் என்பது நாம் அறிந்ததே.
ஜென்மாஷ்டமி- பெயரிலேயே அஷ்டமி உள்ளது.கிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் ஆவணி மாதம் பிறந்தவர். ஆங்கில கணக்கிற்கு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் வரும். கோகுலாஷ்டமி 2017 ஆகஸ்ட் 14, 2017, திங்கட்கிழமை.
பாகவத புராணத்தின் 10 வது அத்யாயம் கிருஷ்ணாவதாரத்தை பற்றியது. கிருஷ்ணர் பிறந்த நேரம் கம்சன் என்னும் கொடுங்கோலன் மதுராவை ஆட்சி புரிந்த நேரம். அவனது சகோதரி தேவகியின் குழந்தையே கிருஷ்ணர் என்பது நாம் அறிந்ததே. தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்பது அசரீரி வாக்கு.
பாகவத புராணத்தின் 10 வது அத்யாயம் கிருஷ்ணாவதாரத்தை பற்றியது. கிருஷ்ணர் பிறந்த நேரம் கம்சன் என்னும் கொடுங்கோலன் மதுராவை ஆட்சி புரிந்த நேரம். அவனது சகோதரி தேவகியின் குழந்தையே கிருஷ்ணர் என்பது நாம் அறிந்ததே. தேவகிக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்பது அசரீரி வாக்கு.
இந்த வாக்கினால் சினம் கொண்ட கம்சன் தேவகி வசுதேவரை சிறையில் அடைத்தான். அவர்களின் ஆறு ஆண் குழந்தைகளை கொன்றான். ஏழாவது குழந்தை வசுதேவரின் நண்பரும் யாதவ குலத்தலைவருமான வசுதேவர் இரண்டாவது மனைவி ரோஹிணியின் கர்பத்தில் போய் தங்கியது. அவரே பலராமன். கிருஷ்ணர் தேவகி வசுதேவரின் எட்டாவது மகனாகப் பிறந்தார்.
தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலஸோபி கௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ர பயோத சௌபகம்
மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டல
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தளம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர்
விரோசமாநம் வசுதேவ ஐக்ஷத
வசுதேவர் அந்த அற்புத குழந்தை நான்கு கரங்கள் கொண்டவராக சங்கு, சக்ரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை நான்கு கைகளிலும் தரித்தவராக, மார்பில் ஸ்ரீவத்சம் உடையவராக, கழுத்தில் கௌஸ்துப மணி கொண்டவராக, தங்க நிற ஆடை அணிந்து, நீல நிற மேகம் போல் விளங்குவதை கண்டார்.
அவரது அடர்த்தியான கூந்தல் நவரத்தினங்கள் பதித்த கிரீடம் மற்றும் ஆபரனங்களுக்கும் நடுவில் பொலிந்து கொண்டிருப்பதை கண்டார். இடுப்பிலும் தோள்களிலும் பொலிவு மிகுந்த ஆபரணங்கள் அலங்கரிப்பதை கண்டார்.
குழந்தை பிறந்த நேரம் நடுநிசி 12 மணி.கும்மிருட்டு.அடர் மழை.வசுதேவர் குழந்தையை தனது நண்பர் நந்தகோபர் இருப்பிடத்திற்கு எடுத்து சென்று குழந்தையை காக்க நினைத்தார். பிறந்தது கடவுள் என்றாலும் தந்தை மனம் பித்து கொண்டுதானே இருக்கும்.கடக்க வேண்டியது யமுனை ஆற்றை. ஆறோ கரை புரண்டு ஓடியது. ஒரு கூடையில் குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் பயணிக்க, யமுனை வழி விட, ஆதிசேஷன் குடைபிடிக்க, எம்பெருமான் நந்தகோபர் இல்லம் வந்து சேர்ந்தார். இந்த நாளையே நாம் கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.
கோகுலாஷ்டமி கிருஷ்ணாவதாரத்தை வரவேற்கும் முகமாக கொண்டாடப்படுவது. கிருஷ்ணாவதாரம் புவியில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ, அப்போதெல்லாம் விஷ்ணு அவதாரமெடுத்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதை உணர்த்துவது .
கிருஷ்ணனின் குறும்புகள் அனைவராலும் ரசிக்கப்படுபவை.அந்த குறும்புகளின் வாயிலாக பெரிய தத்துவங்களை எடுத்துரைத்தவர் கிருஷ்ணர். இதை நாம் உணரும் வகையில் சின்ன கிருஷ்ணனை வரவேற்று அவரை போற்றி பாடுகிறோம்.
சின்ன கிருஷ்ணனை ஒரு குழந்தை வீட்டில் பிறக்கும் சந்தோஷத்தோடு வரவேற்கிறோம்.அவரது குறும்புகளை நினைவில் கொள்கிறோம்.
பொதுவாக கோகுலாஷ்டமி அன்று சாயந்தரத்திலோ, இரவிலோ கொண்டாடுவது வழக்கம்.
கிருஷ்ணனை புகழ்ந்து பாடி, பஜனைகள் செய்வது வழக்கம்.
பகவத் கீதை பாகவதம் போன்றவற்றை படிப்பது வழக்கம்.
கிருஷ்ணனுக்கு பால் தயிர், வெண்ணெய், பட்சிணங்கள் நெய்வேத்யமாக படைக்கப்படும்
கோகுலாஷ்டமி அன்று விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்த பின் விரதம் முறிப்பவர்கள் உண்டு.
மனைகளில் சின்ன பாதம் வரைந்து கிருஷ்ணரை வரவேற்கிறார்கள்.
கோயில்களுக்கு சென்று கிருஷ்ணனை வழிபடுவது வழக்கம்.
குழந்தைகளுக்கு கிருஷ்ணனை போல் வேடமிடுகிறார்கள்.
த்வாரகா, மதுரா, பிருந்தாவன் போன்ற கோயில்களில் கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள குருவாயூரில் கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
குஜராத்தில் உள்ள த்வாரகாவில் இருக்கும் த்வாரகீஸ்வரர் கோவிலில் கோகுலாஷ்டமி அன்று காலை கிருஷ்ணரை தரிசனம் செய்ய முடியும்.பிறகு இரவுதான் சிறப்பு வழிபாடும்,பூஜையும் நடக்கும்.வட இந்தியாவில் உள்ள மதுராவிலும்,பிருந்தாவனத்திலும்,இதே பூஜை முறை பின்பற்றப்படுகிறது.
குஜராத்தில் உள்ள கச் என்ற மாவட்டத்தில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் கண்ணன் புகழ் பாடிக் கொண்டு ஊர்வலமாக வருகிறார்கள்.
மகாராஷ்ட்ராவில் அதிலும் மும்பையில் ஜன்மாஷ்டமி ‘தஹி ஹாண்டி’ என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தஹி ஹாண்டி என்பது ஒரு வகை விளையாட்டு. மேலே கட்டபட்டிருக்கும் பானையை மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் நின்று தேங்காய் கொண்டு உடைப்பதே இந்த விளையாட்டு.பானையினுள் தயிர் இருக்கும்.
தஹி என்றால் தயிர். ஹாண்டி என்றால் மண்ணால் செய்யப்பட்ட பானை. இது கண்ணன் நடத்திய குறும்புகளில் ஒன்று. கோபியர்கள் மண் பானைகளில் தயிரை உயரமான இடத்தில் கட்டுவார்கள். கண்ணன் அங்கு வந்து நண்பர்களை ஒருவர் மேல் ஒருவராக நிற்க வைத்து அவர்கள் மேல் ஏறி அந்த பானையிலிருந்து தயிரை எடுத்து உண்பான். இதனை சித்தரிப்பதே இந்த விளையாட்டு.
தேங்காய் கொண்டு உடைபட்ட பானையிலிருந்து சிதறும் பால் பொருட்களை அங்குள்ளோர் பிரசாதமாக உண்பர். இப்போதெல்லாம் இது ஒரு போட்டியாக மாறி உள்ளது.யார் நிறைய பானைகள் உடைக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு உண்டு.
த்வாரகாவில் இதை மக்கன் ஹாண்டி எனக் கொண்டாடுகிறார்கள்.
ராசலீலா வட கிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கோகுலாஷ்டமி அன்று நடத்தப்படுவது..ராதா கிருஷ்ணனின் கதைகளை நாட்டிய நாடகமாக மணிபுரி முறையில் ஆடி காண்பிப்பதே ராசலீலா.
தென் இந்தியாவில் குழந்தையின் பாதத்தை வீட்டின் ஆரம்பத்திலிருந்து பூஜை அறை வரை வரைந்து கிருஷ்ணனை வரவேற்கிறார்கள்.
சாயந்திரம் பூஜை செய்கிறார்கள்.
பால், தயிர்,முறுக்கு,சீடை ,வெல்ல சீடை ஆகியவற்றை நெய்வேத்யம் செய்கிறார்கள்.
உபவாசம் இருந்து பூஜைக்கு பின் உணவு உண்கிறார்கள்.
கோகுலாஷ்டமி அன்று குழந்தை இல்லாதவர்கள் சந்தான கோபால மந்திரம் சொன்னால் பிள்ளைக் கனி கிட்டும்.
கிருஷ்ணர் பாண்டவர் தூதர்.அவதார புருஷன்.சர்வ ஞானி.எனினும் அவரை ஒரு குழந்தையாக பாவித்து அவரது குழந்தை பருவ நினவுகளை அசை போடக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பமே கோகுலாஷ்டமி.இந்த சந்தர்ப்பத்தை நாமும்தான் குதூகலகமாக கொண்டாடுவோமே.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply