ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம். இது சூரியன் நிரையன மேஷத்தில் நுழையும் நேரத்தினை குறிக்கும். இதனால் நிரையன மேஷ சங்கராந்தி எனவும் புது வருடப் பிறப்பு சொல்லப்படும். ஏப்ரல் 14 சித்திரை மாத தொடக்கத்தைக் குறிக்கும். சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பது நாம் அறிந்ததே.
சித்திரை மாதப் பிறப்பு தமிழ் பேசும் நல்லுலகங்களில் எல்லாம் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதே நாளே ஒடிஸா, மேற்கு வங்காளம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய இடங்களிலும் புது வருடப் பிறப்பாகிறது. இதனை கேரளாவில் விஷு என்றும் வட இந்தியாவில் வைசாகி என்று கூறுகிறார்கள்.
பண்டைய இலக்கியங்களில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதத்தோடு தொடங்குகிறது என்பதற்கான குறிப்புகள் உள்ளன. நக்கீரரின் நெடுநல்வாடை இதனை சுட்டிக்காட்டுகிறது. தொல்காப்பியத்தில் 12 மாதங்களை 6 பருவங்களாகப் பிரித்து அவற்றில் முதல் மாதம் சித்திரையாக குறிக்கப்பட்டு உள்ளது. சிலப்பதிகாரம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 வீடுகளில் முதல் வீடாக சித்திரையை (மேஷத்தை) குறிப்பிட்டு உள்ளது.
எந்த ஒரு ஆரம்பமும் நல்லதை கொடுக்கும் நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்பதற்கு அறிகுறியாக அமைகின்றது. புத்தாண்டு நல்ல நிகழ்வுகளையும், சந்தர்ப்பங்களையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் தான் நாம் தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் கொண்டாடுகிறோம்.
புத்தாண்டின் முதல் நாள் சாயந்திரமே ஒரு தட்டில் மாம்பழம், வாழைப்பழம், பலாப் பழம் போன்றவற்றை அடுக்கி பூ, வெற்றிலை, பாக்கு, தங்கம் வெள்ளி நகைகள், நாணயங்கள் ஆகியவற்றால் அலங்கரித்து ஒரு கண்ணாடியையும் வைத்திருப்பது வழக்கம். இதற்கு விஷு அல்லது கனி காணுதல் எனப் பெயர்.
புத்தாண்டு காலை இந்த தட்டின் முன் கண் விழித்து புது வருட கொண்டாட்டத்தை தொடங்குவது பழக்கம். காய், பூ, கனி, தங்கம், வெள்ளி ஆகியவற்றை முதலில் கண்டுவிட்டு வருடபிறப்பை தொடங்கினால் புது வருடம் நல்லபடியாக அமையும் என்பது உறுதி.
காலையில் நீராடி,இறைவனை தொழுது, கோயில் சென்று, உற்றோரையும், மற்றோரையும் வாழ்த்தி வணங்கி புத்தாண்டு தினத்தை கொண்டாடுவார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். மதுரையின் சித்திரை பொருட்காட்சி பிரசித்தி பெற்றது. திருவிடைமருதூரில் நடக்கும் ரத விழாவும் அருமையானது. திருச்சி காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் இந்த நாளில் சிறப்பு விழாக்கள் நடக்கும்.
மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே.மாங்காயின் துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பல்விதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை புது வருட ஆரம்பத்திலிருந்தே வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.
பஞ்சாங்கம் வாசிப்பது புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பதில் வல்லுநர்கள் புதுவருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்து பலன் கூறுவார்கள். 12 ராசிகளுக்கான பலன்களும், லாப நஷ்ட கணக்கும் படிப்பார்கள். புது வருடத்தின் நிகழ்வுகள் கணித்து சொல்லப்படும். பானகம், நீர் மோர், சுண்டல் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.
புத்தாண்டை மனம் மகிழ கொண்டாடி இறையருளுடன் வாழ்வில் வளம் பெறுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply