நம் நாட்டில் திருவிழாக்கள் நம் கலாச்சாரத்தின் விளக்குகளாகவும் பண்பாட்டின் சின்னங்களாகவும் திகழ்கின்றன. இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் ஜாதி மத வேறுபாட்டைத் தாண்டி ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன.
இந்தியத் திருவிழாக்கள் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பெருவிழாக்களாகத் திகழ்கின்றன. நமது மதத்தின், தேசத்தின் பெருமையை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
நமது நாட்டில் மதம் சார்ந்த பெருவிழாக்கள், தேசியத் திருவிழாக்கள் மற்றும் அந்தந்த சீதோஷ்ண நிலை மற்றும் செயல்பாடுகளை ஒட்டிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மதம் சார்ந்தவை
தீபாவளி, நவராத்திரி, நாகபஞ்சமி, ரக்ஷா பந்தன், துர்கா பூஜை, கணேஷ சதுர்த்தி ஆகியவை இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளாகும். இவை எந்த ஒரு இந்துவையையும் தன் மதத்தை எண்ணி பெருமை கொள்ள வைக்கும் விழாக்களாகும். கிறிஸ்தமஸ், புது வருட கொண்டாட்டமும் கிறிஸ்துவர்களின் முக்கியமான பண்டிகைகளாகும். முசல்மான்கள் பக்ரீத் மற்றும் ரம்ஜானை தங்கள் மதத்தின் முக்கிய பண்டிகைகளாகக் கொண்டாடுகிறார்கள்.
தேசிய விழாக்கள்
நமது சுதந்திரம் பலரின் தியாகத்திலும் ,வேர்வையிலும் கிடைக்கப் பெற்ற ஒன்று.இந்த அரிய சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் நாம் சுதந்திர தின நாளைக் கொண்டாடுகிறோம். நமது முன்னோர்கள் நமக்கு அளித்த மற்றுமொரு சிறப்பு நமது ஜனநாயக அமைப்பு. அது நமக்கு உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் வாய்ப்பை நல்கி உள்ளது. நாம் குடியரசாக மாறிய திருநாளை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.
ஏனைய விழாக்கள்
நம் தட்பவெட்ப நிலைக்கு இணங்க விழாக்கள் கொண்டாடும் வழக்கம் நம்மிடையே உண்டு. வட இந்தியாவில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.ஹோலி என்பது குளிர் காலத்தை விரட்டி கோடையை வரவேற்கும் வண்ணம் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் தமிழர் திருநாளாகும்.அறுவடை முடிந்து புதிய நெற்கதிர்களை வீடு சேர்த்து அந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் வகையில் இதை உழவர் திருநாளாக சூரியக் கடவுளுக்கும், மாடு கன்றுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் முறையில் கொண்டாடுகிறார்கள். இதே மாதிரி வட நாட்டில் பைசாகி என்னும் விழாவை ராபி என்ற பயிரை அறுவடை செய்யும் போது கொண்டாடுகிறார்கள். ஓணம் மற்றும் பிஹு பண்டிகைகளும் பருவங்களைக் குறிப்பதாகும்.
இந்த பண்டிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்பவை
· நமது நாடு பல விதமான வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் பண்டிகைகள் மூலம் ஒருமைபாட்டைக் காட்டுகின்றது.இந்துக்களும்,கிருத்துவர்களும்,முசல்மான்களும் பல பண்டிகைகளைச் சேர்ந்து கொண்டாடும் அழகை நாம் நமது பூமியில் காண முடிகிறது.
· நமது பண்டிகைகள் நமது மனதில் உற்சாகத்தையும் உடம்பில் தெம்பையும் அளிக்கின்றன. விழாக்களை அவ்வப்போது கொண்டாடும் போது நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது.
· பண்டிகைகள் நமது மதத்தைப் பற்றிய செய்திகளை எடுத்துச் சொல்கின்றன.இந்தச் செய்திகள் தலைமுறை தலைமுறையாக எடுத்து செல்வதாக அமைகின்றன.
இவ்வாறாக நமது விழாக்கள் நமக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன.நம்மில் பலர் இந்த திருநாட்களை எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்து அருமையாகக் கொண்டாட விரும்புபவர்கள். நமக்கு என்றும் அந்த மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply