தீபாவளி மக்களின் மனங்களிலும் ,சுற்றுப்புறத்திலும் ஒளியை ஏற்படுத்தும் பண்டிகை ஆகும்.குழந்தை முதல் பெரியவர்கள் வரை குதூகலத்துடன் கொண்டாடும் நாளாகும். தீபாவளி இந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் தேதி வருகிறது.தீபாவளி பொதுவாக ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன் வரும் சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது .
தீபாவளி அன்று நாம் புத்தாடை உடுத்தி,விருந்து உண்டு,நண்பர்களுடனும் சுற்றத்தாருடனும் மனம் மகிழ்ந்து கொண்டாடுகிறோம்.இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எப்படிக் கொண்டாடுகிறார்கள்,தீபாவளிக் கொண்டாட்டத்தின் பின்னணிக் கதைகள் என்ன எனப் பார்ப்போமா?
தீபாவளி - பெயர்க் காரணம்
தீபாவளி என்றால் தீப ஒளி எனப் பொருள்.தீபங்களின் ஒளியால் சுற்றுப்புற இருட்டை நீக்கி,மன இருளையும் நீக்கி வாழ்வை ஒளிமயமாக்கும் நாள் இது.தீபாவளிக்கு தீபங்களிலான வரிசை எனப் பொருள்.இந்த தீபங்களின் வரிசையால் உண்டாகும் ஒளி அறியாமை,தீமை ஆகிய இருட்டை நீக்கி வாழ்வில் வளமாகிய ஒளி உண்டாவதைக் குறிக்கிறது.
தீபாவளிக் கொண்டாட்டங்களை பற்றி ‘பத்ம புராணம்’, ‘ஸ்கந்த புராணம்’ ஆகிய நூல்களில் குறிப்புகள் உள்ளன.
1 .ராமர் அயோத்தியிலிருந்து பதினான்கு வருடங்கள் பிரிந்து இருந்தது நாம் அறிந்ததே.ராவணனை வென்று,சீதையின் மீட்டு, ராமர் அயோத்தி திரும்பினார்.அவர் தங்கள் இடம் திரும்பி வருவதை அறிந்த அயோத்தி மக்கள் அவரின் வரவை தீப வரிசைகளால் அலங்கரித்து நகரத்தை ஒளிமயமாக்கி கொண்டாடினார்கள்.அதுவே இன்றும் தீபாவளி ஆகக் கொண்டாடப்படுகிறது.
2. பாற்கடலில் இருந்து அன்னை லக்ஷ்மி தோன்றிய நாள் தீபாவளியாகக் கருதப்படுகிறது. இந்த நாளில்தான் தன்வந்திரியும் பாற்கடலில் இருந்து தோன்றினார். லக்ஷ்மி செல்வத்தை வழங்குபவள்.தன்வந்திரி ஆரோக்கியத்தை வழங்குபவர்.இந்த இருவரையும் தீபாவளி அன்று வணங்குவதன் மூலம் மக்கள் எல்லா வளங்களும் பெறுகிறார்கள்.இன்றைய தினம் பகவான் விஷ்ணு வைகுண்டம் திரும்பியதாக ஒரு செய்தி உண்டு.
3 .நரகாசுரன் என்ற அரக்கன் மக்களுக்கு சொல்லவொண்ணா துயரங்களை ஏற்படுத்திக் கொண்டு இருந்தான். அவனை அழிக்க வேண்டி, மக்கள் பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.கிருஷ்ணர் நரகாசுரனை ஐப்பசி அமாவாசைக்கு முன் உள்ள சதுர்தசி அன்று அழித்தார்.அந்த நாளே நரக சதுர்தசி எனப் போற்றப்படுகிறது.இதனை தென் இந்திய மாநிலங்களில் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.
4. பாண்டவர்கள் வனவாசம் முடித்த நாளை தீபாவளியாகக் குறிப்பிடுகிறார்கள்.
5. தீபாவளி அன்று குபேர பூஜை, கணேஷ பூஜை செய்கிறார்கள். குபேரன் செல்வத்திற்கு அதிபதி.பிள்ளையார் தடைகளைக் களைபவர்.இவர்களை வணங்குவதால் வாழ்வு இன்னும் மேம்படும் என்பது உறுதி.
தீபாவளியை எவ்விதம் கொண்டாடுகிறார்கள்?
தீபாவளியை ஜைனர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.சீக்கியர்கள் தங்களது குரு ஹர்கோவிந்தர் முகலாய சிறையிலிருந்து தப்பித்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.நேபாளத்தில் இருக்கும் புத்த சமயத்தை சார்ந்த நேவார் மக்கள் இன்றைய தினம் லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். தீபாவளியை கல்கத்தாவில் காளி பூஜையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஐந்து நாள் தீபாவளி கொண்டாட்டம்
இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.முதல் நாள் தன்தேராஸுடன் (Dhanteras) ஆரம்பிக்கிறது. நவராத்திரி முடிந்து 18வது நாள் தன்தேராஸ்(Dhanteras) ஆகும். அன்று லக்ஷ்மிக்கு ஆராதனை நடைபெறும்.அடுத்த நாள் நரக சதுர்தசி .நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததைக் கொண்டாடும் நாள். மூன்றாவது நாள் மாலையில் லக்ஷ்மி பூஜை நடைபெறும்.குபேர பூஜை செய்பவரும் உண்டு. நான்காவது நாள் பாட்வா (Padwa) எனப்படும் பண்டிகை.அது கணவர் மனைவியரின் அன்பை பிரதிபலிப்பது. ஐந்தாவது நாள் பாய் டூஜ் (Bhai Duj).இந்த பண்டிகை சகோதர,சகோதரி பாசத்தைக் கொண்டாடுவது.
1. முதல் நாள்- தன்தேரஸ்
தன்தேரஸ் அன்று லக்ஷ்மி பூஜை நடை பெறுகிறது.இந்த நாளுக்கு முதல் நாள் வீடுகளை சுத்தம் செய்து,கலர் கோலமிட்டு, வீடுகளில் விளக்கேற்றி அன்னை லக்ஷ்மியை வரவேற்கிறார்கள். அன்னை லக்ஷ்மியும், தன்வந்திரியும் பாற்கடலில் இருந்து எழுந்தருளிய நாள் என்பதால் லக்ஷ்மி பூஜையும் தன்வந்திரி பூஜையும் நடைபெறும் நாள் இது.
இரண்டாவது நாள்- நரக சதுர்தசி
நரகாசுரனை கிருஷ்ணர் ஐப்பசி மாத அமாவாசைக்கு முன் வரும் சதுர்தசி அன்று வதம் செய்தார். இதனால், மக்கள் வாழ்வில் வளமும், நலமும், ஒளியும் வந்தன. எனவே, இந்த நாளை நரக சதுர்தசி எனக் கொண்டாடுகிறார்கள். தமிழ் நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கோவா, தெலுங்கானா ஆகிய பிரதேசங்களில் நரக சதுர்தசியை தீபாவளி எனக் கொண்டாடுகிறார்கள். அதிகாலை எண்ணெய் ஸ்நானம் செய்து, இனிப்பு வகைகளுடன் உணவு உண்டு, தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
மூன்றாவது நாள்- லக்ஷ்மி பூஜை
இந்த நாளின் மாலையில் லக்ஷ்மி பூஜை நடைபெறுகிறது. குபேர பூஜை, சரஸ்வதி பூஜை, பிள்ளையார் பூஜை செய்வதும் உண்டு.
நான்காவது நாள்- பட்வா (Padwa)
பட்வா (Padwa) கணவன் மனைவியின் அன்பை உறுதிப்படுத்தும் பண்டிகையாகும்.இந்த நாளில் கணவன்மார்கள் தங்கள் மனைவியருக்கு பரிசுகள் அளிப்பது வழக்கம். புதிதாக மணமானவர்களை பெண்களின் பிறந்த வீட்டில் விருந்துக்கு அழைப்பார்கள்.இன்று கோவர்தன பூஜை செய்யும் வழக்கமும் உண்டு.
ஐந்தாவது நாள் – பாயி டூஜ் (Bhai Dooj)
இது சகோதர சகோதரி பாசத்தை விளக்கும் பண்டிகையாகும்.ராக்கி பண்டிகை போன்றது. சகோதர சகோதரியர் பரிசளித்து, விருந்து உண்டு,பேசி மகிழும் பண்டிகை இது.
இவ்வாறாக தீபாவளி ஐந்து நாள் பண்டிகையாக வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழ் நாட்டில் நரக சதுர்தசியை தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.
அதிகாலை எழுந்து எண்ணெய் ஸ்நானம் செய்து,புது ஆடை உடுத்தி,பெரியோரின் ஆசி பெற்று,இனிப்புகளை பகிர்ந்து ,பட்டாசு கொளுத்துகிறார்கள்.
ஏதாவது ஒரு கோயிலுக்கு செல்லும் வழக்கமும் உண்டு.
தீபாவளிக்கு என்றே ஒரு விசேஷமான எண்ணையை தமிழர்கள் தயாரிக்கிறார்கள்.நல்லெண்ணையில் மிளகு,வெற்றிலை சேர்த்துக் காய்ச்சி அதனை தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.
தீபாவளி லேகியம் செய்து, குளித்த பின் அதனை உண்ணும் பழக்கமும் தமிழர்களுக்கு உண்டு.இந்த லேகியம், இஞ்சி மற்றும் மருத்துவ பொருட்களால் ஆனது.
இந்த நாளில் கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் உண்டு.
சரி ,தீபாவளியைப் பற்றி இவ்வளவு தெரிந்த பின் அதனை மேலும் குதூகலமாகக் கொண்டாட ஆரம்பிக்கலாமே?
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply