ஆடி என்றவுடன் அம்மன் வழிபாடும் ,நீத்தார் கடனும் நமக்கு நினைவுக்கு வரும்.ஆடி செவ்வாயும்,ஆடி அமாவாசையும் நமக்குள் விளைவித்திருக்கும் தாக்கமே காரணம்.
ஆடியின் விசேஷங்களுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அது அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம்.சக்தி வழிபாடும் சக்தியின் பிம்பமான மாரியம்மன் வழிபாடும் இந்த மாதத்தில் அதிகம்.
இரண்டாவது காரணம் ஆடி மாதம் தக்ஷிணாயன புண்ய காலத்தின் ஆரம்பம். தேவர்களுக்கு இரவு நேரம் தொடங்கும் காலம். எனவே திருமணம், கிரக பிரவேசம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடத்தாமல்,மக்கள் பித்ரு சேவை, ஸ்ராத்தம், தர்ப்பணம் ஆகியவற்றில் மனதை செலுத்தும் நேரம்.
சரி,ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னவென்று பார்ப்போமா?
ஆடி மாதம் ஒன்றாம் தேதியை ஆடி பிறப்பு என்கிறோம். ஆடி பிறப்பை பாயசம், வடை, போளி என பல வகையான உணவு வகைகளோடு ஆடி பண்டிகையாக கொண்டாடுகிறோம். வீட்டின் வாயிலில் வண்ண கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி கடவுளை கும்பிட்டு ஜமாய்க்கிறோம்.
புதிதாக மணமானவர்களுக்கு இது ஒரு குதூகலமான நாள். மணமகனை மணமகளின் பெற்றோர்கள் அழைத்து, விருந்தோம்பி, நல்லுணவு கொடுத்து, புது ஆடை கொடுத்து கௌரவிக்கும் நாள் இது.
இந்த நாளில் மணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வார்கள்.
ஆடி பிறப்பு அன்று தர்ப்பணம் செய்வது நல்லது .ஏனென்றால் இந்த நாள் சூரியன் தெற்கு முகமாக செல்வதை குறிக்கும். தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கம். தேவர்கள் உறங்கும் வேளையில் நமது முன்னோர்களுக்கு ஸ்ராத்தம் ,தர்ப்பணம் செய்வதுதான் முறை.
ஆடி அமாவாசை உன்னதமான தர்ப்பண தினம். ஏனென்று சொல்ல தேவை இல்லை. இதற்கு முன்பே சொன்ன காரணம்தான். தக்ஷிணாயன புண்ய காலத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது. அந்த வகையில் ஆடி அமாவாசை விசேஷமானது.
ஆடி பூரம் அம்மனுக்கு உகந்தது. கோயில்களில் அம்மனுக்கு வளையல்களை மாலையாகப் போட்டு அந்த வளையல்களை பெண்டிருக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். மணமான பெண்டிர் அந்த வளையல்களை வாரிசு வேண்டி பெறுவார்கள். இந்த வளையல்கள் அவர்களை எல்லாவித தீய சக்திகளில் இருந்தும் காப்பாற்றும் என்பது நம்பிக்கை.
ஆடி பூரத்தை ஆண்டாள் ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த மாதம். ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர்.பெரியாழ்வாரின் மகள். திருமாலை மனத்தால் ஏற்றுக் கொண்டு அவருக்காக பாவை நோன்பு இருந்து அவரோடு இணைந்தவர். ஆண்டாளின் கல்யாணத்தை 10 நாள் உத்சவமாக நடத்தி பத்தாம் நாள் ஆடி பூரம் அன்று திருக்கல்யாணம் நடை பெறுகிறது.
திருமணமாகாத இள நங்கையர், இந்த திரு கல்யாணத்தை பார்த்தால் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.
ஆடி பெருக்கு ஆடி மாதத்தின் 18 வது நாளாகும்.மழையை நம்பி இருக்கும் நாம் அந்த மழையை சேகரித்து நமக்கு நீர்பாசன உதவிசெய்யும் ஆறினையும், ஏனைய நீர் நிலைகளையும் வணங்கி நன்றி செலுத்தும் நாளாகும்.காவேரி அன்னையை வணங்கி போற்றும் நாளாகும். காவேரி நதி கரையில் சித்ரான்னங்கள் எடுத்து சென்று, அன்னை பார்வதிக்கு படைத்து மகிழும் நாள் இது. ஆடி நமக்கு பருவ மழையை கொண்டு வரும் மாதம் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆடி பெருக்கன்று ஏதாவது ஒரு செடியை நடுவதோ அல்லது விதையை விதைப்பதோ நமது பழக்கம். ஆடி பட்டம் தேடி விதை என்பர். ஆடி பெருக்கு வளமையை குறிக்கும் நாள் என்பதால் பெண்டிர் இந்த நாளில் அன்னை பார்வதியை வணங்கி அவரின் அருளினை பெறுகிறார்கள். காவேரி அன்னைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
ஆடி தபசு அன்னை பார்வதி சிவனை வேண்டி ஆடி மாதத்தில் கோமதி அம்மன் வடிவில் தவமிருந்ததை குறிக்கிறது. முடிவில் சிவன் சங்கர நாராயணாராக தோன்றி அன்னைக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சி சங்கர நாராயணர் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வரலக்ஷ்மி விரதம் ஆகஸ்ட் 4ம் தேதி வருகிறது. இது லக்ஷ்மி தேவியை வேண்டி பெண்டிர் நடத்தும் பண்டிகையாகும். இந்த நாளில் அஷ்ட லக்ஷ்மிகளையும் பூஜிக்கிறார்கள். இந்த விரதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளி கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிவனாரிடம் அன்னை பார்வதி பெண்டிருக்கு எந்த விரதம் நன்மை பயக்கும் என வினவிய போது அவர் வரலக்ஷ்மி விரதத்தை சுட்டி காட்டியதாக புராணம் சொல்லுகிறது
கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள்.ஆடி கிருத்திகை முருக பக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது
ஆடி வெள்ளியும் ஆடி செவ்வாயும் அம்மன் அருள் வேண்டுவோரால் போற்றப்படும் நாட்கள்.அம்மனுக்கு விசேஷ அலங்காரம், அபிஷேகம் பூஜை நடக்கும் நாட்கள் இவை. மாரியம்மன் விழாக்களும் விமரிசையாக நடக்கும் மாதம் ஆடி..
ஆடி மாதத்தின் சிறப்புகள் அறிந்த பின் அந்த மாதத்தை நன்முறையில் பயன்படுத்தி இறை அருளும் ,முன்னோரின் ஆசிகளும் பெறுவது நன்றன்றோ?
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply