பொங்கல் என்றாலே கரும்பையும் சர்க்கரைப் பொங்கலையும் நினனக்கும் நமக்கு அதன் தாத்பர்யமும், உள்ளார்ந்த அர்த்தமும் புரிந்தால் மகர சங்கராந்தியை கொண்டாடுவதை மகத்துவம் வாய்ந்ததாக கருதுவோம் என்பதில் ஐயமே இல்லை.
மகரம் என்பது ராசியின் பெயர். சங்கராந்தி என்பது நகருதலை குறிக்கும். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நகரும் நாளை மகர சங்கராந்தி எனக் கூறுகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த நாளில் பகலும், இரவும் சரி சமமான நேரத்தை கொண்டு இருக்கும் என்பதாகும். இந்த நாளிலிருந்து சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறார். இது குளிர் காலம் கழிந்து கோடை தொடங்குவதை குறிக்கிறது.
மகர சங்கராந்தி மற்ற திருநாட்கள் போல் அல்லாமல் சூரியனை மேற்கொண்டு அமைந்த நன்னாளாக அமைகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரே தினத்தில் அமையும் தன்மை வாய்ந்தது. ஜனவரி14 அன்று நாம் ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தியை கொண்டாடுகிறோம். இந்த நாளிலிருந்து வசந்த நவராத்திரி ஆரம்பமாகிறது.
மகரசங்கராந்தியை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவிதமாக கொண்டாடுகிறார்கள். குஜராத்தில் ‘உத்தராயன்’ என அழைக்கப்படும் இந்த நாள் பட்டங்களை வானில் செலுத்தி விளையாடும் நாளாகும்.உத்தரப் பிரதேசத்தில் இந்த நாளில் கங்கையின் புனித நீரில் நீராடுவதை பெரும்பாக்கியமாக கருதுகிறார்கள்.‘ கிச்சேரி’ என அழைக்கப்படும் இந்நாள் உத்தர பிரதேசத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வங்காளத்தில் கங்கா சாகர் மேளா மகர சங்கராந்தி அன்று கொண்டாடப்படுகிறது. அசாமில் இதனை போகலிபீகு என அழைக்கிறார்கள்.பஞ்சாபில் இந்த நாள் லோஹரி என அழைக்கப்படுகிறது. எந்த பெயராக இருந்தாலும் மகர சங்கராந்தியை கொண்டாடுவதில் மக்கள் மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழரும்,தெலுங்கு இனத்தவரும் இதை அறுவடை திருநாளாக கொண்டாடுகிறார்கள்
மகர சங்கராந்தி அன்று சூரியன் தனது மகன் வீடான மகரத்தில் பிரவேசிக்கிறார். சனியும் சூரியனும் பகைமை உடையவர் என்பது ஜோதிட உண்மை. தன் மகனாம் சனியின் வீட்டில் பிரவேசிக்கும் சூரியன் நமக்கு பகைமை உணர்வை ஒழிக்க வேண்டும் என்னும் நல்லுண்மையை உணர்த்துகிறார்.
.மகாபாரத்தில் பீஷ்மர் தனது சாவை தான் வேண்டும் நேரத்தில் பெறும் வரம் பெற்றவர். அம்பு படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிய நேரத்தில் உத்தராயண காலத்திற்காக காத்திருந்து மகர சங்கராந்தியை எதிர் நோக்கினார் என்பது புராணம் கூறும் செய்தி.
பகீரதன் தவமிருந்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்த செய்தி நாம் அறிந்ததே. அவர் கடுமையான தவம் புரிந்து தனது 60,000 முன்னோர்களை கொடிய சாபத்தின் பிடியிலிருந்து மீட்டார். இது கபில முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் நடந்தது. இன்றும் அது வங்காளத்தில் கங்கா சாகர் மேளா எனக் கொண்டாடப்படுகிறது.
பகீரதனின் முன்னோர்கள் நமது தேங்கி நிற்கும் தீய எண்ணங்களை குறிப்பதாகவும், பகீரதனின் தவம் இந்த எண்ணங்களை களையும் பிரம்ம ஞானமாகவும் கருதப்படுகின்றனர்.
மகர சங்கராந்தி அன்று தான் பகவான் விஷ்ணு அசுரர்களின் கொட்டத்தை அடக்கி அவர்களின் தலைகளை மந்திர மலையின் அடியில் புதைத்தார்.
இவ்வாறாக மகர சங்கராந்தி புராண பெருமைகள் வாய்ந்ததாக இருக்கிறது.
கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒரு முறை பிரயாகை, நாசிக், உஜ்ஜையனி மற்றும் ஹரித்வாரில் கொண்டாடப்படுகிறது. பிரயாகையில் ஒவ்வொரு வருடமும் கும்ப மேளா சிறிய அளவில் மக மேளாகவாக கொண்டாடப்படுகிறது.கங்கா சாகர் மேளா வங்காளத்தில் கொண்டாடப்படுகிறது. துசு மேளா என்பது ஜார்கண்டில் கொண்டாடப்படுவது ஆகும்.
விதவிதமான இனிப்புக்களும் மகிழ்ச்சியான வாழ்த்துக்களும் நிறைந்ததே மகர சங்கராந்தி. பல நிறமுடைய அல்வாவை உண்டு சந்தோசம் காண்பது வட இந்தியரின் மரபு. எள்ளுருண்டை இத்திருநாளின் மற்றுமொரு இனிப்பு வகையாகும். இத்தகைய இனிப்புக்கள் நாவிற்கு சுவை கூட்டுவதோடு உடலையும் உஷ்ணப்படுத்தி குளிருக்கு இதம் அளிக்கின்றன. பட்டம் விடுவதும் இதற்கே-உடல் உஷ்ணம் பெறும், மனம்மகிழ்ச்சி அடையும்.
தமிழினத்தவர் மகர சங்கராந்தியை தைத் திருநாளாக கொண்டாடுகிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது கூற்று. அன்னை பூமிக்கும், சூரியக் கடவுளுக்கும் நன்றி கூறும் முகமாக இத்திருநாளை தமிழர் கொண்டாடுகிறார்கள். உழவர் திருநாளாம் தைபொங்கலில், மாடு கன்றுகளில் இருந்து எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்தும் முகமாக இந்நாள் அமைகிறது.
ஆந்திர பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் அறுவடை திருநாளாக இருக்கும் மகர சங்கராந்தி கேரளத்தில் சபரி மலை தரிசனத்திற்கு உகந்ததாக இருக்கிறது.
ஆக,மகர சங்கராந்தி தன்னுள் பல நல்ல செய்திகளை அடக்கி மக்களுக்கு ஆன்மீக வழி காட்டும் ஒரு அற்புத திருநாளாகும். வடக்கில் ஒரு வாசகமுண்டு.
Meethe Gur me mil gayaTil,
UdiPatangaurkhilgayeDil,
Jeevan me baniraheSukhaur Shanti,
Mubarak ho aapkoMakar-Sankranti.
இதன் அர்த்தமாவது
எள்ளுருண்டை உண்டு உடலை உற்சாகப்படுத்துவோம்
பட்டங்கள் விட்டு மனதை உற்சாகப்படுத்துவோம்
வாழ்வில் வளமும் சுகமும் உண்டாகட்டும்
உங்களுக்குமனமார்ந்தமகர சங்கராந்தி வாழ்த்துக்கள்.
மகர சங்கராந்தி தீயவற்றை அழித்து நல்லவற்றை கொடுக்கும் என்பதில் ஐயமுண்டோ?
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply