மகா சிவராத்திரி சிவனின் மகிமை உணர்த்தும் பெரு நாள். சிவ பக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரு நாள்.
மகா சிவராத்திரி 2௦18ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி, செவ்வாய்க் கிழமை அன்று வருகிறது.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரி மாசி மாதம் வரும் போது இதை மகா சிவராத்திரி எனக் கொண்டாடுகிறோம்.
பகலும் இரவுமாக விரதம் இருந்து சிவனடி சேரும் வழி கொடுக்கும் நாள் இது. நம்மின் பாபங்களைத் தொலைத்து ஆன்மீக சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் விரதமிது.
மகா சிவராத்திரி விரதமிருப்பவர்கள் காலையிலிருந்து மறுநாள் காலை வரை விரதமிருப்பார்கள். தண்ணீர் கூட அருந்தாதவர்களும் உண்டு. மறு நாள் சிவ தரிசனம் செய்து பிரசாதத்தை ஏற்று விரதத்தை முடிப்பார்கள்.
முடியாதவர்கள் பால் பழம் உண்ணுவது உண்டு. இரவிலும் முழித்து இருப்பதே இந்த விரதத்தின் பெருமை. சிவ புராணங்களைப் படித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இரவை இறை சிந்தனயில் கழித்து சிவ தரிசனம் காண்பது ஆன்மீக வாழ்விற்கு வளம் தருவதாகும்.
மகா சிவராத்திரியின் மகிமையை ஒரு விறகுவெட்டியின் கதை வெளிப்படுத்துகிறது. மற்ற கதைகள் சிவனை பற்றியவை ஆகும்.
முன்பு ஒரு காலத்தில் விறகுவெட்டி ஒருவன் காட்டில் சென்று இரவில் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டான். ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். கொடிய மிருகங்களை நினைத்து பயந்த அவன் தூங்காமல் மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக கீழே எறிந்தான்.
அவன் அமர்ந்தது வில்வ மரத்தின் மேல்.கீழே வில்வ இலைகளை எறிந்ததோ சிவ லிங்கத்தின் மேல். இதை விட அவனுக்கு வேறு என்ன பேறு வேண்டும்? அறியாமலே வில்வ மரத்தின் மேல் அமர்ந்து, வில்வ இலை சேர்த்து, சிவனை இரவு முழுவதும் தூங்காமல் பூஜித்ததால் அவன் பூஜித்த இரவைக் கொண்டாடும் வகையில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
விறகு வெட்டியைப் போல் நமக்கும் இறை அருள் முழுமையாகக் கிடைக்க மகா சிவராத்திரி நோன்பு உதவுகிறது
மகா சிவராத்திரி அன்று சிவ பார்வதியின் திருமணம் நடந்ததாக புராணம் கூறுகிறது.
தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சதி ஹிமவானின் மகள் பார்வதியாக உருவெடுத்தாள். பார்வதி இமய மலையில் தவமிருந்து, சிவனின் கரம் பற்றிய தினம் இது.
சிவ பார்வதியின் ஒன்றுபட்ட சக்தியாலேயே உலகம் இயங்குகிறது. அதனைப் போற்றும் வகையிலும் நாம் மகா சிவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.
மகா சிவராத்திரி அன்று, ஆதியும் அந்தமும் இல்லாத எம்பெருமான் பெரும் தீப் பிழம்பாக நாராயணன் மற்றும் பிரமனின் முன் தோன்றினார்.
பிரம்மா அன்ன வடிவிலும் விஷ்ணு காட்டுப் பன்றி வடிவிலும் சிவனின் ஆதியும்,அந்தமும் தேடிச் சென்றனர். பிரம்மா வானில் சிவனின் தலைப் பகுதியையும், விஷ்ணு பாதாளத்தில் சிவனின் காலடிப் பகுதியையும் தேடிச் சென்றனர். ஆனால் அவர்களால் ஐயனின் ஆதியும் அந்தமும் கண்டறிய முடியவில்லை.
வானில் வெகு தூரத்தில், ஒரு தாழம்பூவைக் கண்ட பிரம்மா சிவனின் தலைப் பகுதியைத் தான் கண்டுவிட்டதாகப் பொய் உரைத்தார். இதனால் பிரம்மாவிற்கு தனியாக கோயில் இல்லாமல் போகட்டும் என சிவன் அவருக்கு சாபமிட்டார்.
பிரம்மா, விஷ்ணுவின் முன் லிங்க வடிவில் சிவன் எழுந்தருளிய நன்னாளே மகா சிவராத்திரி.
பாற்கடலை அசுரரும் தேவரும் கடைந்த போது, அமிர்தத்துடன் எழுந்த விஷத்தை சிவனார் உண்டார். அது அவரது தொண்டையிலேயே தங்கியமையால் அவர் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது மகா சிவராத்திரி அன்று தான். உலகைக் காக்கும் பொருட்டு விஷத்தை ஏற்றுக் கொண்ட சிவனின் தாள் பணியும் நாளிது.
மகா சிவராத்திரி இந்தியாவிலும் நேபாளத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தின் பசுபதிநாதர் கோயில், காசியின் விஸ்வநாதர் கோயில், மற்றும் தென் இந்தியாவின் பழமையான கோயில்களில் மகா சிவராத்திரி உத்சவம் அருமையாகக் கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதமிருந்தால் நம் பாபங்கள் தொலையும்.
வீடு பேறு கிட்டும்.மறு பிறவி கிடையாது.
சிவன் ஆன்மீக ஒளியாய் நாராயணனுக்கும் பிரம்மனுக்கும் முன் தோன்றியவர் எனபதால் அவரை இந்த இரவில் வணங்கினால் ஆன்மீக அறிவு கிட்டும்.மற்றும் நமது மனத்தைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
பகலிலும் இரவிலும் விரதமிருப்பதால் நமது ரஜஸ் தமஸ் குணாதிசயங்களை கட்டுப்படுத்த முடியும். ரஜஸ் குணம் நமது தீய எண்ணங்களை காட்டுகிறது. விரதமிருந்து மனத்தை ஒருமுகப்படுத்துவதால் ரஜஸ் குணத்தை கட்டுப்படுத்த முடியும். தமஸ் என்பது நமது செயலின்மையைக் குறிக்கிறது. உறங்கும் நேரத்தில் நாம் செயலிழந்தவர்களே. இரவில் முழித்து இறை சிந்தனயில் ஆழும் போது நமக்கு செயல் திறன் கிடைக்கிறது.செயலின்மை இல்லை.
மகா சிவராத்திரி விரதமிருந்து சிவனை வணங்கி, கொண்டாடி மகிழ்ந்து, இறைஅருள் பெற்று, நன்மை அடைவோமாக.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply