தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இந்த வருடம் மார்ச் 18 - ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஆந்திர மாநிலத்தவரும், கர்நாடக மாநிலத்தவரும் கொண்டாடுகிறார்கள். புது வருட தினத்தைக் கொண்டாடும் பண்டிகை இது.
மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பண்டிகையாக இருக்கும் யுகாதி பண்டிகை, புது வருடத்தின் நிகழ்வுகளை ஜோதிட ரீதியாக எடுத்துச் சொல்லும் பண்டிகையாகவும் இருக்கிறது.
யுகாதி என்ற சொல்லுக்கு சம்ஸ்க்ருதத்தில் யுகத்தின் ஆரம்பம் எனப் பொருள். புராணப் பின்னணியில் பார்த்தால் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கியவுடன் கலி யுகம் ஆரம்பித்தது. அந்த கலியுகத்தை, அதாவது, நாம் வாழும் யுகத்தை குறிக்கும் வண்ணம் யுகாதி என்ற சொல் சொல்லப்படுகிறது.
60 வருட சுழற்சியில் ஒவ்வொரு வருடமும் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு பெயர் உண்டு. இந்த அறுபது வருடங்கள் முடியும் போது மீண்டும் முதல் வருடத்தின் பெயர் ஆரம்பிக்கும். அப்படிப் பார்க்கும்போது படைக்கும் கடவுளாம் பிரம்மா முதன் முதலில் படைக்கத் தொடங்கிய நாளினை யுகாதி என்கிறோம்
யுகாதி பண்டிகை சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி அன்று கொண்டாடப்படுகிறது. (ChaitraShudhdhaPaadyami-‘சைத்ர’ என்பது சித்திரை மாதத்தை குறிக்கும். சுத்த பாதயாமி என்பது அமாவாசைக்கு அப்புறம் வரும் பிரதமையைக் குறிக்கும்). இது சூரியன் மீனத்திற்குள் நுழையும் நேரத்தையும் குறிக்கும். யுகாதி பண்டிகை பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமையும். இந்த வருடம் யுகாதி மார்ச் 18ம் தொடங்கும் வருடத்திற்கு விளம்பி நாம சம்வத்ஸர வருடம் என்ற பெயருடையது.
யுகாதி வசந்த காலத்தில் அமைவது. வசந்தத்தின் பசுமையையும்,மகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்து உள்ளது. பழைய நிகழ்வுகள் மறைந்து புதிய முயற்சிகளையும் எண்ணங்களையும் ஊக்குவிக்கும் முகமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே புதுத் தொழில் ஆரம்பிப்பதை இந்த நாளில் செய்கிறார்கள்.
புதிய வருடத்தின் நிகழ்வுகளை ஜோதிட உதவி கொண்டு பஞ்சாங்கம் வாசித்து சொல்வது யுகாதி பண்டிகையின் சிறப்பு அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பது, கேட்பது இந்த பண்டிகையின் முக்கிய அம்சமாகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ள ’யுகாதி க்ரித்’ என்னும் நாமத்திற்கு யுகங்களை உருவாக்குபவர் என்று பொருள். இந்த நாளில் விஷ்ணுவை வணங்குவது சாலச் சிறந்தது.
யுகாதி புது வருடத் தொடக்கத்தை கொண்டாடும் வகையில் உள்ளது.அதி காலையிலேயே எண்ணெய் குளியலோடு புது வருடக் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது . வாசலில் மாவிலை தோரணம் கட்டி, ரங்கோலி இட்டு யுகாதி பச்சடி செய்து சாப்பிடுகிறார்கள். யுகாதி பச்சடி மாறுபட்ட சுவைகளை தரும் பொருட்களால் செய்யப்படுகிறது. புளிப்பும், இனிப்பும் கசப்பும் சேர்ந்து வாழ்க்கையும் அவ்வண்ணமே என உணர்த்துவது.
மாலையில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கமுண்டு. பண்டிதர்கள் அல்லது பெரியவர்கள் கோவிலிலோ பொது இடங்களிலோ வீடுகளிலோ பஞ்சாங்கம் படித்து புதுவருடப் பிறப்பின் சிறப்பு அம்சங்களை எடுத்து சொல்கிறார்கள்.
யுகாதி பச்சடியில் ஆறுவிதமான உணவு பொருட்கள் சேர்க்கப்படுகின்றன
1. வெல்லம் -இனிப்பு,மகிழ்ச்சி
2. வேப்பமொட்டு- கடுப்பு,சோகம்
3. புளி சாறு- புளிப்பு,வெறுப்பு
4. உப்பு-உப்பு சுவை,பயம்
5. பச்சை மிளகாய்-காரம்,கோபம்
6. வேப்பம்பூ,சிறிதளவு மாங்கொட்டை- துவர்ப்பு,ஆச்சர்யம்
மேலே கூறப்பட்ட கலவையில்ருந்து அறுசுவை நாக்குக்கு மட்டுமல்ல.வாழ்க்கைக்கும் உண்டு . வாழ்க்கை மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, பயம், கோபம், ஆச்சர்யம் ஆகியவற்றின் கலவை என்பதை யுகாதி பச்சடி உணர்த்துகிறது. எனவே வருடத்தின் முதல் தினமே அதை ருசி பார்த்திட வேண்டும் என்ற நம்பிக்கை தெரிகிறது.
பஞ்சாங்கம் புது வருடத்தின் முக்கிய நிகழ்வுகளை கோடிட்டுக் காட்டுவது.புது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை பண்டிதர்களும், பெரியவர்களும் படிக்க அதை காதால் கேட்பது விசேஷம். பஞ்சாங்கம் ஜோதிட முறைப்படி கணிக்கப்பட்ட நூல். அதில் புது வருடத்துக்கான பலன்களை ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வதே பஞ்சாங்கம் வாசிப்பது. யுகாதி அன்று இது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இவ்வாறாக யுகாதி கொண்டாடுதல் தென் இந்திய மாநிலங்களில் ஒரு முக்கிய பண்டிகையாகும். மகாராஷ்ட்ராவில் இந்த பண்டிகையை ‘குடி பட்வா’ (Gudi Padwa) என்கிறார்கள். இதையே ராஜஸ்தானில் மார்வாடிகள் ‘தப்னா’ (Thapna) எனக் கூறுகிறார்கள். சிந்தியர்கள் ‘சேதி சந்த்’ (Cheti Chand) என அழைக்கிறார்கள்.
பழையன கழிந்து புதியன புக நல் யுகாதி வாழ்த்துக்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply