வாமன ஏகாதசி எனப்படும் பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி ஆவணி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியைக் குறிக்கிறது. இது பகவான் விஷ்ணுவின் வாமன அவதாரத்தின் மகிமையைக் கூறுகிறது. ஜல்ஜிலினி ஏகாதசி மற்றும் ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறப்படுகிறது.
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி வரும் நேரம் திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளை. இந்த நாளில் அவர் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் திரும்பிக் கொள்கிறார். இதனாலேயே இந்த ஏகாதசிக்கு இந்த பெயர் வந்தது. இப்போது உறங்கும் பகவான் ஹரிபோதினி ஏகாதசி (கார்த்திகை மாதம் வருவது) வரை உறங்குகிறார்.
பார்ஷ்வா ஏகாதசி தக்ஷிணாயன புண்ய காலத்தில் வருவது. சாதுர்மாஸ்ய நேரமும் ஆகும். அதனால் மிகவும் புனிதமாக கருதப்படுவது. எல்லா பாபங்களையும் களைய வல்லது.
பார்ஷ்வா ஏகாதசியின் பின்னணி கதை
பார்ஷ்வா ஏகாதசி வாமன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இது பகவான் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தை குறிக்கிறது. இந்த கதையை பிரம்ம வைவத்ர புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தருமருக்கு எடுத்து சொல்கிறார்.
த்ரேதா யுகத்தில் மஹாபலி என்ற அசுர அரசன் இருந்தான். அசுர குலத்தில் பிறந்தாலும் சிறந்த விஷ்ணு பக்தன். நன்மைகள் பல புரிந்தவன். யாகங்களும் தானங்களும் செய்வதில் வல்லவன். எனினும் அசுர குலத்தில் பிறந்ததால் அழிவை சந்திக்க வேண்டியதாயிற்று..
ஒரு சமயம் மகாபலி இந்திரனோடு சண்டை செய்து அவரிடமிருந்து அவரது ராஜ்யத்தை பறித்துக் கொண்டார். இந்திரன் ஏனைய தேவர்கள் முனிவர்களுடன் சென்று திருமாலிடம் முறையிட அவரும் வாமன அவதாரம் எடுத்தார்.
மகாபலி செய்யும் யாகத்தில் கலந்து கொண்டார் வாமனராம் அந்த தெய்வீக பிராமணர். குழந்தையை போல் உருவில் சிறியவராக தோற்றமளித்த வாமனரிடம் அவர் விரும்பும் தானம் என்னவென்று மகாபலி அரசன் வினவினான்.
மூன்றடி மண் கேட்டார் வாமனர். வந்திருப்பது மகாவிஷ்ணுவென உணர்ந்த பலியின் குரு சுக்ராச்சாரியார் பலி சக்ரவர்த்தியை அந்த தானமளிப்பதில் இருந்து தடுத்தார். பலியோ வந்திருப்பவரின் எண்ணம் அறிந்தும் தானம் அளிக்க தயார் ஆனான். என்னே ஆச்சர்யம்! மள மளவென வளர்ந்தது வாமனனின் உருவம்.
ஓரடியால் இப்புவி அளந்தார் வாமன அவதாரமெடுத்த மகாவிஷ்ணு. அடுத்த அடியில் ஆகாயம் அளந்தார். மூன்றாவது அடி அளக்க இடம் இல்லை, வந்திருக்கும் இறைவன் முன் வணங்கி தனது தலையை அவரது பாதத்தின் கீழ் வைத்தான் மகாபலி. அப்படியே அவனை பாதாள லோகத்திற்கு பாதம் கொண்டு தள்ளினார் எம்பெருமான்.
மகாபலியின் பணிவை மெச்சி அவனை அமரராக்கினார் மகா பிரபு. அவனது இல்லத்தில் தாம் என்றும் வசிப்பதாக வாக்கு கொடுத்தார். அதற்கு ஏற்ற மாதிரி அவரது உருவ பொம்மை பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி அன்றிலிருந்து மகாபலியின் மாளிகையில் வணங்கப்பட்டது.
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசியை அனுசரிப்பது எப்படி?
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி விரதம் அனுசரிப்பது ஏனைய ஏகாதசி விரதம் போன்றதுதான் .
இந்த நாளில் முத்தெய்வங்களையும் (பிரம்மா,விஷ்ணு,சிவன்) வணங்குதல் வேண்டும்.
வாமன தேவரையும், திருவிக்ரமரையும் வணங்க வேண்டும்.
அன்னத்தில் தயிரை சேர்த்து அதனுடன் வெள்ளியும் ஒரு பிராமணருக்கு தானம் கொடுத்து இரவு முழுதும் கண்விழித்து இருந்தால் புண்ய பலன் ஏராளமாக அடையலாம் .
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி விரத பலன்
பார்ஷ்வா பரிவர்த்தினி ஏகாதசி விரதமிருந்தால் ஆயிரம் யானை தானம் செய்த பலன் கிடைக்கும்.
இந்த விரதம் மூலம் வைகுண்ட பதம் கிடைக்கும்.
இந்த விரதம் அனுஷ்டித்தால் வாழ்வில் செய்த தீவினைகளின் பலனிலிருந்து விடுபடலாம்.
பாப சுமையிலிருந்து விடுபடலாம்.
இத்தகைய அருமையான ஏகாதசி அன்று விஷ்ணுவை போற்றி அவர் பாதம் பணிந்து வைகுண்டம் சேரும் வழி காணலாமே?
நாங்கள் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளை உங்கள் தேவைக்கேற்ப செய்து தருவதோடு கோயில் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் விரும்பும் கோயிலின் தெய்வத்திற்கு வீட்டிலிருந்தபடியே அர்ச்சனையும் அபிஷேகமும் பதிவு செய்து கொள்ளலாம். நாங்கள் நீங்கள் விரும்பும் கோயில்களில் சேவைகளுக்கு ஏற்பாடு செய்ய ஆவன செய்து வருகிறோம். உங்களின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் . மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply