விஜயா ஏகாதசி தை மாதத்தில் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஏகாதசியைக் குறிக்கும். இந்த ஏகாதசியை அனுசரித்தால் வாழ்வின் பாபங்கள் தொலைந்து வெற்றிகள் கைகூடும் என்பது நிச்சயம்.
இந்த வருடம் விஜயா ஏகாதசி, பிப்ரவரி 11ம் தேதி அன்று வருகிறது.
‘விஜய’ என்றாலே வெற்றி என்று தானே பொருள்?
விஜயா ஏகாதசி கதையை ஸ்ரீ கிருஷ்ணர் தருமருக்குக் கூறும் போது, ‘இதனை பிரம்மா தனது மகன் நாரத முனிவருக்குக் கூறினார்’ எனக் கூறுகிறார்.
விஜயா ஏகாதசியை ராமர் அனுசரித்தார் என ஸ்கந்த புராணம் கூறுகிறது.
ராமர் 14 வருடங்கள் சீதாவுடனும், லக்ஷ்மணனுடனும் காடு ஏகியது நாம் அறிந்ததே. அவர்கள் கானகத்தில், பஞ்சவடியில் தங்கி இருந்த போதுதான் ராவணன் சீதையை அபகரித்தான். சீதையைத் தூக்கிச் சென்ற ராவணனோடு சண்டை செய்து தோற்ற ஜடாயுவின் மூலம் ராமர் நடந்ததை அறிந்தார்.
பின், சீதையைத் தேடி அலைந்த ராமர் வானரர்களின் தலைவனாம் சுக்ரீவனுடன் நட்பு மேற்கொண்டார். சுக்ரீவனின் அமைச்சராம் ஹனுமார் தனது சக்தியால் கடல் தாண்டி, இலங்கையில் அசோக வனத்தில் சீதையைக் கண்டு, ராமர் கொடுத்த கணையாழியை அவளிடம் சமர்ப்பித்தார்.
ஹனுமார் மீண்டும் கடல் தாண்டி ராமர் இருப்பிடம் வந்து சீதையின் நிலைமையை ராமருக்கு எடுத்துக் கூறினார். அண்ணலும் வருத்த மிகுதியோடு சீiதையை மீட்கத் தீர்மானித்தார்.
“நடுவில் இருப்பதோ கடல். ராமரும், அவரது சேனைகளும் கடல் தாண்டித்தானே ராவணனோடு போரிட வேண்டும்? மற்ற வானரங்களுக்கு ஹனுமானைப் போல் கடலைத் தாண்டும் சக்தி கிடையாதே? என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த ராமருக்கு லக்ஷ்மணன் ஒரு உபாயம் சொன்னார்.,
“அண்ணலே! அருகே வகதாலப்ய முனிவரின் ஆஸ்ரமம் இருக்கின்றது. அவர் முனி ஸ்ரேஷ்டர். அவரிடம் சென்று நம் பிரச்சினைக்கு வழி கேட்கலாம்.” என்று கூறினார்.
ராமரும், லக்ஷ்மணனும் வகதாலப்ய முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அவரை வணங்கினார்கள். தங்களின் கஷ்டத்தை எடுத்துக் கூறினார்கள். முனிவரும் ராமரை விஜயா ஏகாதசி விரதம் இருக்க அறிவுறுத்தினார்.
அவர் கூறிய அறிவுரை பின் வருமாறு:
“மனிதர்களில் தலை சிறந்தவனே ராமா! அப்பழுக்கிலாத சரித்திரம் உடையவனே! வரும் விஜயா ஏகாதசி அன்று நான் கூறும் முறையில் நீயும், உன் சேனையும் விரதமிருந்தால், அந்த விரத பலனால் உனக்குக் கடல் கடந்து, ராவணனை வெல்லும் சக்தி கிடைக்கும்.
விஜயா ஏகாதசிக்கு முன் தினமாம் தசமி அன்று ஏதாவது ஒரு உலோகத்தாலோ, மண்ணாலோ செய்த கலசம் ஒன்று எடுத்துக் கொண்டு, அதனுள் தண்ணீரை நிரப்பு. பின் கலசத்தின் வாயை மா இலைகளால் அலங்கரித்து, அதன் மேல் ஒரு மூடியை வை. அந்த மூடி மேல் ஏழு வகை தானியங்களைப். பரப்பி, அதோடு மாதுளை, தேங்காய் ஆகியவற்றையும் வை அதற்கு மேல் திரு நாராயணனின் உருவச் சிலையை வை. கலசத்தை மாலைகளாலும், சந்தனத்தாலும் அலங்கரிக்க வேண்டும்.
ஏகாதசி அன்று இந்த கலசத்திற்குப் பூஜை செய்ய வேண்டும். விரதமிருக்க வேண்டும். அன்று இரவு கண் விழித்து ஹரி நாம சிந்தனையில் ஈடுபட வேண்டும். மறு நாள் அந்தக் கலசத்தை ஒரு நீர் நிலைக்கு எடுத்துச் சென்று, கலசத்திற்குப் பூஜை செய்ய வேண்டும். பிறகு,அந்தக் கலசத்தை ஒரு தகுதி வாய்ந்த பிராமணருக்குத் தானமாகத் தந்த பின், விரதத்தை முறிக்க வேண்டும்.”
“இவ்வாறு செய்தால் .நீ ராவணனை போரில் வெல்வது உறுதி.” என முனிவர் ராமனை வாழ்த்தினார்.
ராமரும், லக்ஷ்மணனும், வானர சேனைகளும் அவ்வாறே விஜயா ஏகாதசி அன்று விரதமிருந்து, கடலின் மேல் பாலம் அமைத்து, இலங்கையை அடைந்து, ராவணனை வென்று, சீதையை மீட்டனர்.
எவன் ஒருவன் விஜயா ஏகாதசி விரதத்தை அனுசரிக்கிறானோ, அவனுக்குப் பாபங்களிலிருந்து விடுதலை உண்டு.
அவனது எல்லா முயற்சிகளிலும் அவனுக்கு வெற்றி கிட்டும்.
இறப்பிற்குப் பிறகு வைகுண்டம் சேர்வான்.
விஜயா ஏகாதசியின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ, அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
விஜயா ஏகாதசி அனுசரித்து வாழ்வில் வெற்றியையும், பாபங்களில் இருந்து விடுதலையையும் பெறுவோமாக!
.......................................................................................................................................
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply