தொந்தி விநாயகனை ஆவணி சதுர்த்தியில் போற்றுவோமே!
எந்த முக்கில் திரும்பினாலும் ஒரு விநாயகர் பொம்மையை, சிலையை, ஓவியத்தை நம் கண்கள் நோக்கிக் கொண்டே இருக்கும். அத்தனை மகிமை படைத்தவர் இந்த தொந்தி வயிறுடைய ஆனை முகத்தோன். பிள்ளையார் மனது வைத்தால் முடியாத காரியம் இல்லை. எல்லா காரியங்களுக்கும் முதன்மையாக இருப்பவர். ஞானத்தின் அதிபதி.
அப்படிப்பட்ட முழு முதற் கடவுளை, பார்வதி நந்தனை வணங்கி போற்றும் மகா உத்சவமே விநாயக சதுர்த்தி. ஆவணி மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தியில் வருவது. விநாயகரின் பிறந்த நாளாக அமைவது. அவரை போற்றி பாடி அவர் அருள் பெறும் நாளிது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக மகாராஷ்டிராவிலும் கோவாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் பிறந்த கதை
விநாயகர் அன்னை பார்வதி, தந்தை சிவனின் மூத்த மகன். பார்வதி தேவி தான் குளிக்கும் போது வாயிலை காவல் காக்க விநாயகரை உருவாக்கினாள். அந்த சமயம் இமய மலையில் தவமிருந்துவிட்டு அங்கு வந்த சிவனார் பார்வதி இருக்கும் இடத்திற்கு வந்தார். அவரை விநாயகர் தடுத்தார். அவருக்கு விநாயகர் யாரென்று என்று தெரியவில்லை. சினத்தில் விநாயகரது தலையை கொய்துவிட்டார்.
விநாயகர் யாரெனத் தெரிந்த உடன் சிவன் அவருக்கு தலையை கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனது கணங்களுக்கு விநாயகருக்கு பொருத்தமான தலையை தேடும் பணியை கொடுத்தார். அவர்களும் ஒரு யானையின் தலையை தேடிக் கொண்டு வந்தார்கள் .அந்த தலையை விநாயகரின் உடலில் பொருத்தி அவரின் உருவத்திற்கு உயிர் கொடுத்தார் பரமசிவன்.
விநாயக சதுர்த்தி கொண்டாடுவது எப்படி வந்தது?
ஆனை முகத்தோன் பானை வயிறுடையோன். தனது வயிற்றை தூக்கி கொண்டு அவர் நடந்து வருவது ஒரு அழகுதான். ஆனால், அவரின் தொந்தி வயிற்றை ஒரு கேளிக்கைக்கான விஷயமாக பார்ப்பவரும் உண்டுதானே? சந்திர பகவான் இந்த தவறு செய்தார்.
பிள்ளையார் தனது பெரிய வயிற்றினை தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு நடப்பதை பார்த்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரித்து விட்டார். இதனைக் கண்ட கணபதி கோபம் கொண்டார். சந்திரன் இனி மேல் ஒளி இழந்துவிடுவார் என உரைத்தார். இதனால் உலகம் இருளில் முழ்கியது.
தேவர்களும் முனிவர்களும் விநாயகரிடம் சந்திரன் மேல் கருணை கொள்ளும்படி வேண்ட விநாயகரும் மாதத்தில் ஒரு நாள் சந்திரன் முழுமையாக ஒளி இழந்து இருப்பார். அதற்கு பின் மெதுவாக வளர்ந்து முழுமை பெற்று பின் தேய்வார் என உரைத்தார்.
ஆவணி வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனை கண்டவர்கள் அபவாதத்திற்கு உள்ளார்வார்கள். அன்று விநாயகருக்கு பூஜை செய்தால் அபவாதத்திலிருந்து மீள்வார்கள்.இதனாலேயே விநாயக சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் வந்தது.
ஸ்ரீகிருஷ்ணரும் சமந்த மணி விஷயத்தில் அபவாதத்திற்கு உள்ளானவர் தானே?
விநாயக சதுர்த்தி வரலாறு
ரிக் வேதத்தில் விநாயகரை பற்றி இரு முறை குறிப்பு இருக்கிறது.
ஸ்கந்த புராணத்திலும், பிற பழைய கிரந்தங்களிலும் விநாயகரை புகழ்ந்து கூறி உள்ளார்கள் .
தலைமுறை தலைமுறையாக விநாயக சதுர்த்தியை கொண்டாடி உள்ளார்கள்.
பின் சத்ரபதி சிவாஜி இதை ஒரு சமூக ரீதியான திருவிழாவாக கொண்டாடினார்.
பேஷ்வா அரசும் சிவாஜியை போன்றே விநாயக சதுர்த்தி கொண்டாடினார்கள்.
பின்னர் இந்திய சுதந்திர போரின் போது லோக மான்ய திலக் விநாயக சதுர்த்தியை ஜாதிகளுக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை நீக்க ஒரு நாடு தழுவிய திருவிழாவாக கொண்டாடினார்.
இன்றும் விநாயக சதுர்த்தி நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள்
விநாயக சதுர்த்தியை பத்து நாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
விநாயக சதுர்த்தி (ஆவணி வளர்பிறை சதுர்த்தி) அன்று பெரிய உருவம் படைத்த விநாயகர் பொம்மையை (மண்ணினாலோ, மற்ற பொருளினாலோ செய்தது) கொண்டு வந்து ஒரு பெரிய பந்தலில் மேடை கட்டி அங்கு ஆவாஹனம் செய்கிறார்கள்.
விநாயகருக்கு தினமும் பூஜை நடத்தி நெய்வேத்யம் படைக்கிறார்கள் .
அவருக்கு சோடஷ உபசாரம் (பதினாறு வகை சேவை) நடத்துகிறார்கள்.
அவருக்கு பிடித்த கொழுக்கட்டை, மோதகம், பழங்கள் நெய்வேத்யம் செய்கிறார்கள்.
பத்தாம் நாள் விநாயகர் பொம்மையை ஊர்வலமாக எடுத்து சென்று அருகிலுள்ள நீர்நிலையில் கரைத்து விடுகிறார்கள்.
விநாயகரை போற்றி கோஷங்கள் எழுப்புகிறார்கள்.
வீடுகளில் விநாயக சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?
வீடுகளில் விநாயகரை மண்ணினால் செய்து அல்லது மண் பொம்மையை வாங்கி பூஜை செய்வது வழக்கம். மண் பொம்மையை அருகிலுள்ள ஆற்றிலோ, கிணற்றிலோ கரைத்து விடுவது வழக்கம். மண்ணினால் ஆன விநாயக பொம்மையை வைத்து விநாயக சதுர்த்தி அன்று வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விநாயக அகவல்,கணபதி அதர்வஷீத், விநாயக புராணம், ஸ்கந்த புராணத்தில் விநாயகரை பற்றிய குறிப்பை படிப்பார்கள்.
விநாயகருக்கு பிடித்த பதார்த்தங்களாம் கொழுக்கட்டை, சுண்டல், லட்டு, மோதகம் ஆகியவற்றை நெய்வேத்யமாக படைக்கிறார்கள்.
அருகம் புல், எருக்கு மாலை ஆகியவற்றை விநாயருக்கு அர்ப்பிப்பது வழக்கம்.
விநாயகர் குழந்தைகளிலிருந்து முதியோர் வரை எல்லோருக்கும் பிடித்த தெய்வம்.. அவர் இஷ்டப்பட்டதை கொடுக்கும் தெய்வம். அவரை விநாயக சதுர்த்தி அன்று வணங்கி வாழ்வில் உன்னதம் பெறுவோமே
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply