அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான் ( கம்ப ராமாயணம்).
ஆஞ்சநேயர் என்றாலே சஞ்ஜீவிமலை தூக்கி கம்பீரமாய் கடல் தாண்டும் வீர் வானர புருஷர் நம் கண் முன் தோன்றுவார்.வாயு குமாரனாம் இந்த அஞ்சனை மைந்தர் நினைத்ததை முடிக்க வல்லவர் .கடல்தாண்டி அன்னை ஜானகியை ஸ்ரீராமனிடம் சேர்த்தவர்.பலசாலி,புத்திசாலி மற்றும் நம் சங்கடங்களை போக்க வல்ல சக்தி படைத்தவர்.
அஞ்சனையின், கேசரியின் பிள்ளையாக சிவ அருள் பெற்று பிறந்தமையால் ஹனுமான் சிவம்சமாகக் கருதப்படுபவர்.ஆஞ்சநேயன் என்றும் கேசரிநந்தன் என்றும் பெயர் பெற்றவர்.வாயுவின் புத்திரனாகவும் இருப்பதால் மாருதி எனவும் அழைக்கப்படுபவர்.பஜ்ரங்கபலிஎனவட இந்தியாவில் தொழப்படுபவர்.
வாயுவின் சக்தி பெற்று கடல்,மலை என எந்த ஒருதொலைவையும் தாண்டக் கூடியவர் ஹனுமான்.தன் உருவத்தை சுருக்கியும்,விரித்தும் அவர் ஆற்றிய லீலைகள் ராம கதையில் நம்மை வியக்க செய்தவையே.ஒரு சாபத்தால் தன் சக்தியை தானே மறந்து இருக்கும் ஆஞ்சநேயருக்கு அதை ஜாம்பவான் நினைவு படுத்தி அவரை கடல் தாண்டத் தூண்டியது நாம் அறிந்த ஒன்று.
ராமனை தன் மார்பில் சுமந்து கொண்டு இருப்பவர் ஆஞ்சநேயர்.சஞ்ஜீவி மலை கொண்டு வந்து இந்திரஜித்தின் நாகாஸ்த்திரத்தால் ஏற்படுத்தப்பட்ட லக்ஷ்மணனின் மூர்ச்சை தெளிவித்தவர்.ராமனுக்காக இலங்கையை தீக்கிரையாக்கி ,அன்னை சீதாவின் சூடாமணியை ராமனிடம் சேர்பித்தவர். இன்றும் ராமகதை நடக்கும் இடந்தோறும் கை கூப்பி ராம ஜெபத்தில் ஈடுபடும் சிரஞ்சீவி. ராம பக்தர்களிற்கு எடுத்துக்காட்டு ஆஞ்சநேயர்.
தமிழர் மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் வரும் நாளை ஹனுமானின் பிறந்த தினமாக கொண்டாடுகிறார்கள்.அந்த நாள் மார்கழி அமாவாஸ்யைஆகவும் அமைகிறது. அதிகாலையில் இருந்து ஆஞ்சநேய துதிகள் கோவில்களில் முழங்குகின்றன. வடஇந்தியாவில் சைத்ர மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோயில் சென்று ஆஞ்சநேயரின் சிந்தூரத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆஞ்சநேயர் உடல் முழுவதும் சிந்தூரம் பூசப்பட்டு இருப்பது நமக்கு தெரிந்த ஒன்று.அன்னை சீதா தன் நெற்றியில் ராமரின் நலனுக்காக சிந்தூரம் வைத்திருப்பதைக் கண்ட அனுமன், தன் உடல் முழுவதும் ராமன் நலம் கருதி சிந்தூரம் பூசிக் கொண்டாராம். அந்த சிந்தூரத்தை நாம் அணிய நமக்கு நலம் பெருகும் என்பதில் ஐயம் ஏதும் உண்டோ?
ஆஞ்சநேயர் வானர வம்சத்தை சேர்ந்தவர்.மனத்திற்கு தோன்றியதை செய்வது ஒரு வானரத்தின் இயல்பு.கிளைக்கு கிளை தாவும்,நினைத்த இடத்தில் அமரும்.பின் தன் செயல் மறந்து வேறு ஒரு திசை நோக்கி செல்லும்.
ஆஞ்சநேயரின் பிறப்பு நம் மனதின் செயல்பாடுகளை குறிப்பதாக அமைகிறது. நம் மனதின் சிந்தனைகள் ஒரு குரங்கின் செயல்களுக்கு ஒப்பானவை.’மனித மனம் ஒரு குரங்கு’ என்றான் ஒரு கவிஞன். மனதை அடக்கி ஆளவில்லை என்றால் அது தன்னிச்சையாக செயல்படும். பல இன்னல்களை விளைவிக்கும். எப்படி ஆஞ்சநேயர் தன் பிறப்பு தாண்டி,பராக்ரமங்கள் புரிந்து,ராம பக்தியில் கலந்து உள்ளாரோ , அது போல் நாமும் நம் மனதை அடக்கி,ஆன்மீக ஞானம் பெற்று இறைவனிடம் இரண்டற கலக்க வேண்டும் என்பதே செய்தி.
ஹனுமான் ஜெயந்தி அன்று துளசிதாசரின் ஹனுமான் சாலீஸாவை பாடுவது ஆஞ்சநேயர் துதிக்கு உன்னதம் சேர்க்கும்.அதை தினந்தோறும் பாராயணம் செய்ய சகல சங்கடங்களும் விரைந்தோடும்.
Weather forecast from yr.no, delivered by the Norwegian Meteorological Institute and the NRK
Leave a Reply