ஏகாதசி என்பது பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகு வரும் 11 வது நாளாகும். இன்று விரதமிருப்பதால் நமக்கு வைகுண்ட பதம் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே.
ஆம்லா என்றால் நெல்லி கனியாகும். நெல்லி மரத்தை வணங்குவதும் , பரசுராமரிடம் பிரார்த்தனை செய்வதும் ஆமல்கீ ஏகாதசியின் முக்கிய அம்சங்களாகும். ஆமல்கீ ஏகாதசி அன்று விரதமிருப்பவர்களுக்கு செல்வமும், பாபமின்மையும் கிட்டும். பிறவியிலிருந்து முக்தி கிட்டும்
ஆமல்கீ ஏகாதசி ஹோலியின் ஆரம்பத்தில் அமைவதால் அதற்கு ஆன்வலா, ரங்கு பரி மற்றும் குஞ் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. கேரளத்தில் திருநாவாய ஏகாதசி என்றும் ஒரிசாவில் பான்கோதர் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆமல்கீ ஏகாதசியை பற்றி பிரமாண்ட புராணத்தில் வசிஷ்ட மாமுனி மந்தத அரசனிடம் எடுத்து சொல்கிறார்.
முன்பு ஒரு காலத்தில் வைதிஷ்டராஜ்யத்தை சைத்ரதன் என்பவர் அரசாண்டு வந்தார். அவர் பண்பாளராகவும், பராக்ரமசாலியாகவும் திகழ்ந்தார். அவரது பிரஜைகள் தத்தம் தர்மத்தை கடைப்பிடித்து புண்யவான்களாக திகழ்ந்தார்கள்.
அன்று ஆமல்கீ ஏகாதசி .ஏகாதசியும் துவாதசியும் இணைந்த தினம் வேறு. மன்னர் ஆற்றுக்கு சென்று நீராடி ,நெல்லி மரத்திற்கு பூஜை செய்து, நைவேத்யம் அர்ப்பணித்து, பரசுராமரையும் வேண்டி பணிந்தார். அவருடன் கூட சாதுக்களும், மக்களும் கூடியிருந்தனர்.
அந்த இரவில் மன்னர் நோன்பிருந்து, கண் முழித்து விஷ்ணு கதைகளையும்,கானங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். குழுமியிருந்தோரும் விஷ்ணு த்யானத்தில் முழ்கி இருந்தனர்.
அந்த நேரம் ஒரு வேடன் அங்கு வந்தான். அவனுக்கு இந்த நிகழ்வுகளின் முக்யத்துவமும், காரணமும் புரியவில்லை. எனினும்,ஆர்வம் மேலிட்டமையால் அருகில் ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டு அவன் நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான். அந்த இரவு அவன் உணவு உண்ணவில்லை, கண் துஞ்சவில்லை.
சரி,என்ன நடந்தது தெரியுமா?
அந்த வேடன் அடுத்த பிறவியில் மன்னராகப் பிறந்தான். விதுரதரின் மகன் வசுரதராகப் பிறந்தான். வசுதரர் சக்திசாலியாகவும், நற்குணங்கள் நிரம்பப் பெற்றவராகவும் இருந்தார்.
ஒரு நாள் வசுதரர் வேட்டையாடச் சென்றார். சென்ற இடத்தில் வழி தப்பியமையால் தனியாக அலைந்து கொண்டு இருந்தார். களைத்து போன அவர் ஒரு மரத்தடியில் தூங்க ஆரம்பித்தார். அந்த பக்கமாக வந்த சில காட்டு வாசிகள் அவரை தங்கள் எதிரி என அடையாளம் கண்டு கொண்டு ஈட்டியாலும் வாளாலும் துன்புறுத்த ஆரம்பித்தனர். அவர்களால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் தெரியுமா?அவர்களுக்கும் புரியவில்லை.
அப்போது வானில் ஒரு குரல் எழுந்தது. அவரின் பெருமையைக் கூறியது . முன் பிறவியில் ஆமல்கீ ஏகாதசி அன்று விரதமிருந்து கண் முழித்தமையால் விஷ்ணுவின் கடாக்ஷம் கிடைக்கப் பெற்றவர். அதனால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என அந்தக் குரல் உரைத்தது.
இப்போது புரிகிறதா ஆமல்கீ ஏகாதசியின் மகிமை? அறியாமல் விரதமிருப்பதற்கே இந்த பலன் என்றால் அறிந்து விஷ்ணு நாமம் சொல்லி, ஆமல்கீ ஏகாதசி விரதம் இருந்து வணங்கினால், அனைத்து ஜன்ம பலனும் புண்ணியம் தானே?
நெல்லி மரம் கிடைக்கப் பெறாதவர்கள் துளசிச் செடியைத் வணங்கலாம்..
மேலும் ஏகாதசி விரதம் பற்றி அறிய
ஏகாதசி விரத பலன்களும் கடைபிடிக்கும் முறையும்
Leave a Reply