மோகினி ஏகாதசி சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி திதி அன்று வருவது. இந்த ஏகாதசி விரதம் இருந்தால் இன்றைய பிறவியின் வினைகள் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் கழியும் என்பது நிச்சயம். எந்த ஒரு சோகம் இருந்தாலும் விலகும். வாழ்வில் வளம் பெருகும். புறவாழ்வின் பற்றுதல் நீங்கும்.
விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்த நாள் ஆகையால் இதற்கு மோகினி ஏகாதசி எனப் பெயர் வந்தது. இந்த வருடம் மோகினி ஏகாதசி மே மாதம் 6ம் தேதி வருகிறது.
மோகினி ஏகாதசி கதையை ஸ்ரீ கிருஷ்ணர் தர்மருக்கு சொல்லியதாக கூர்ம புராணத்தில் செய்தியுண்டு. வசிஷ்டர் இதன் பெருமையை ஸ்ரீராமனுக்கு எடுத்துரைத்தாராம்.
ராமர் சீதையை பிரிந்த துன்பத்தில் இருந்த போது அதிலிருந்து விடுபட வசிஷ்டரிடம் ஒரு வழி வேண்டினார். வசிஷ்டர் அப்போது மோகினி ஏகாதசி விரதம் ராமரின் துன்பத்தை துடைக்கும் என உரைத்தார். இதனை விளக்க ஒரு கதையையும் கூறினார்.
சரஸ்வதி நதி கரையில் பத்ராவதி என்ற நகரத்தை த்யுதிமன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனது ராஜியத்தில் தனபாலன் என்ற வணிகன் இருந்தான். தனபாலன் சிறந்த விஷ்ணு பக்தன். அற செயல் பலவும் செய்து மக்களின் நலனுக்கு பாடுபட்டவன். அவனுக்கு ஐந்து புதல்வர்கள். சுமணன், த்யுதிமன், சுக்ரியன், மேதாவி மற்றும் திரிஷ்தபுத்தி என்பவர் ஆவர் அவர்கள்.
இவர்களில் திரிஷ்தபுத்தி மிகவும்கீழ்த்தரமான செய்கைகளை கொண்டவன். அவனின் தீய நடவடிக்கைகள் பிடிக்காமல் தனபாலன் அவனை வீட்டை விட்டு வெளியேற்றினான். அவனும் ஒரு திருடனாக மாறி நகரத்தை கொள்ளை அடித்தான். அரச காவலர்களால் பிடிபட்டு பல முறை சவுக்கடிபட்டான்.
கடைசியில் மன்னரின் ஆட்கள் அவனை நாடு கடத்தினர். காடு சென்ற திரிஷ்தபுத்தி விலங்குகளை உணவுக்காக வேட்டையாடி காலத்தை கழித்தான். வருடங்கள் சென்றன. ஒரு நாள் கௌண்டின்ய முனிவரின் ஆஸ்ரமத்தை சென்றடைந்தான்.
அப்போதுதான் முனிவர் கங்கையில் நீராடிவிட்டு ஆஸ்ரமம் திரும்பிக்கொண்டு இருந்தார். அவரின் மேல் கங்கையின் நீர்த்துளிகள் ஒட்டிக்கொண்டு இருந்தன. அவரது ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன. உடனே, அவனின் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவன் தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட நினைத்தான். அதனை முனிவரிடம் உரைத்தான்.
திரிஷ்தபுத்தியின் கதையை கேட்ட முனிவர் அவனை மோகினி ஏகாதசி விரதம் இருக்க சொன்னார். அவனின் பாபங்களும் சோகங்களும் விலகும் என்றார். அவனும் அவ்வண்ணமே செய்து கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான்.
மோகினி ஏகாதசி விரதமிருந்தால் இந்த பிறவி மற்றும் முந்தைய பிறவிகளின் பாபங்கள் விலகும். சோகங்கள் மறையும். வாழ்வின் தடைகற்கள் நீங்கும். பரமபதம் கிடைக்கும். இதனை கேட்போருக்கும் படிப்போருக்கும் ஆயிரம் பசுக்கள் தானம் செய்த பலன் கிடைக்கும். மாயை அகலும். புற வாழ்வின் ஆசைகளில் இருந்து விடுபடுவோம்.
இந்த ஏகாதசி விரதம் இருக்கும் போது வெண்கலத்தால் ஆன பாத்திரங்களில் உணவு உண்ணக் கூடாது.
புனித நதிகளில் நீராடுவதன் பலன்,புனித யாத்திரை அல்லது தானம் கொடுப்பதன் பலன் இந்த விரதமிருக்கும் போது கிடைக்கும் பலனில் 1/16 பங்கே ஆகும்.
மோகினி ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் பாபங்களிலிருந்து விடுதலை பெறுவோமாக!
எங்கள் வைதீக மையம் சென்னையில் பூஜை மற்றும் ஹோமம் சேவைகளுக்கு சிறந்த மையமாகும். உங்களது அனைத்துவிதமான ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு, எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply