ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது. இந்த வருடம் இந்த நாள் நவம்பர் 3ம் தேதி வருகிறது.
சிவன் அபிஷேகப் பிரியர் என்பது நாம் அறிந்ததே. சிவனுக்கு அர்பணிக்கப்படும் 16 திரவியங்களுள் அன்னமும் ஒன்று. அன்னம் சிவனுக்கு மிகவும் பிடித்த அபிஷேகப் பொருளாகும்.
ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் தனது முழுப் பொலிவுடன் பூமியை நெருங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி.சமைத்த அரிசி சந்திரன் முழுப் பொலிவுடன் திகழும் நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சந்திரனுக்கு உரிய அரிசி அவர் முழுமையாகத் திகழும் ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அர்பிக்கப்படுவதேன்? சிவனுக்கும் சந்திரனுக்கும் இந்த நாளில் என்ன சம்பந்தம்?
இந்த கேள்விக்கு ஒரு புராணக் கதை பதிலளிக்கிறது.
சந்திரனுக்கு 27 நட்சத்திரங்களும் மனைவியர். இவர்களில் சந்திரன் ரோஹிணியிடம் மிகுந்த பிரியம் காட்டினார். அவர் ஏற்கனவே தனது மாமனார் தக்ஷனிடம் தனது அனைத்து மனைவியரையும் பாரபக்ஷமின்றி நடத்துவதாக வாக்கு கொடுத்து இருந்தார். ஆனால் ரோஹிணியிடம் அதிக பிரியம் காட்டியமையால் தக்ஷனால் சபிக்கப்பட்டார்.
தக்ஷன் சந்திரனின் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து அவர் தனது ஒளியை இழப்பார் என சபித்தார் .அதன்படியே சந்திரனும் தனது ஒளியை இழக்க ஆரம்பித்தார். சந்திரன் தக்ஷனிடம் தனக்கு சாப விமோசனம் வேண்டினார். தக்ஷன் சந்திரனிடம் திங்களூர் சென்று சிவனை வழிபடச் சொன்னார். சந்திரனும் அவ்வண்ணமே திங்களூரில் சிவ வழிபாட்டில் ஈடுபட ,மனம் மகிழ்ந்த ஈசன் அவருக்கு ஒளி திரும்பக் கிடைக்க வரமருளினார்.
நாள்தோறும் வளர்ந்து பின் தேய்ந்து சந்திரன் உலகிற்கு ஒளி வழங்குவார் என அருளினார். மற்றும், எல்லா நாட்களை விடவும் ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் தனது முழுப் பொலிவோடு திகழ்வார் எனவும் கூறினார். இது மட்டுமல்லாமல்,சந்திரனை தனது தலையிலும் அணிந்து கொண்டார் எம்பெருமான்.
சந்திர ஒளியை இவ்வுலகிற்கு மீண்டும் கொண்டு வந்த எம்பெருமானை சந்திரனுக்கு உகந்த அன்னத்தால் அபிஷேகம் செய்து, சந்திரன் முழுமையாகப் பொழியும் ஐப்பசி பௌர்ணமி அன்று வணங்குவது சிறந்ததுதானே?
அன்னாபிஷேகம் சிவனாருக்கு நன்றி நவிலலா?
சிவன் இந்த உலகின் ஒவ்வொரு ஜீவ ராசியையும் ரட்சிப்பவர்.பஞ்ச பூதங்களை (நிலம்,நீர்,காற்று, ஆகாயம்,தீ) வழி நடத்துபவர். அவரை அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பான ஒன்று. ஏனென்றால் அரிசி விளைய பஞ்ச பூதங்களின் துணை நாடுகிறது.
பூமியில் பயிராக காற்றின் உதவி கொண்டு வளர்கிறது. ஆகாயம் வழி கிடைக்கும் நீரையும்,சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் எரி சக்தியையும் பயன்படுத்தி வளர்கிறது. இத்தகைய அரிசியை கொண்டு சமைக்கப்படும் அன்னத்தைக் கொண்டு உயிரினத்தை காக்கும், பஞ்ச பூதங்களின் தலைவனாக விளங்கும் சிவனுக்கு அபிஷேகம் செய்வது அவருக்கு நன்றி காட்டும் முகமே ஆகும்.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்பதால் ஏற்படும் நன்மைகள்
கர்ம வினை நீங்கும்
வாழ்வு வளம் பெறும்
மழலை செல்வம் கிட்டும்
வியாபார பிரச்சனைகள் நீங்கும்
தானியங்கள் பெருகும்
சிறு குழந்தைகள் அன்னாபிஷேக பிரசாதம் சாப்பிட்டால் அவர்களுக்கு ஞாபக சக்தி வளரும்.
இவ்வளவு மகிமை வாய்ந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தில் நாமும் பங்கேற்று பயன் பெறுவோமே!
Leave a Reply