பாவை நோன்பைப் பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை' என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு பூமியிலிருந்த கிடைத்த மகள் தான் கோதை என்ற ஆண்டாள். இவர் கண்ணனின் தீவிர பக்தை. அவரையே நினைத்திருந்து கடைசியில் ஸ்ரீரங்கத்தில் அவரையே மணந்து அவரால் ஆட்கொள்ளப்பட்டவர்.
கூடாரவல்லி மார்கழியின் 27வது நாளில் வருகிறது. மார்கழியின் ஒவ்வொரு நாளிலும் பாவை நோன்பு இருந்த ஆண்டாள் ஸ்ரீ கோவிந்தனிடம் திருக்கல்யாண வரம் பெற்று அவரைச் சென்றடையும் நாள் இது.
2018 கூடாரவல்லி ஜனவரி 11, வியாழக்கிழமை வருகிறது.
திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள் மார்கழி நோன்பை பற்றியும் அதை எப்படி மேற்கொள்வது என்பதையும் சொல்கிறது.
6-15 பாடல்களில் தன் தோழிகளை எழுப்புகின்ற ஆண்டாள்,
16வது பாடலில் கண்ணின் வீட்டிற்கு வந்து வாயில் காப்பானை எழுப்புகிறாள்.
தொடர்ந்து வரும் பாடல்களில் நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை, அவள் மார்பின் மீது படுத்துறங்கும் கண்ணனையும் எழுப்புகிறாள்.
23வது பாடலில் கண்ணன் எழுந்திருப்பதையும்,
24இல் அவன் அவதாரங்களை புகழ்ந்தும் பாடுகிறாள்.
27வது பாடலான கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா என்ற் பாசுரத்தில் 'மார்கழி நோன்பு முடியும் தருவாயில் உள்ளது, உன்னை நாங்கள் பாடி உன் அருளை வேண்டுகிறோம், இத்தனை நாள் ஆபரணங்கள் அணியாமல், கண்ணுக்கு மை எழுதாமல், மலர் சூடாமல், நெய், பால் ஆகியவை உண்ணாமல் பாவை நோன்பை மேற்கொண்டு உன் புகழ் பாடினோம், நீ எங்களுக்கு அருள் செய்து நாங்கள் வேண்டுவன தா என்று சொல்கிறாள்'.
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."
பொருள்:
பகைவரை வெல்லக்கூடிய வலிமையுடைய கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடிப் புகழ்ந்து நாங்கள் பெறும் சன்மானங்கள் நாடே புகழும் அளவுக்கு சிறப்பானது. நாங்களோ சூடகம்(வளை), தோள்வளைகள் (வங்கி),தோடுகள், பூவின் வடிவில் இருக்கும் காது ஆபரணங்கள், காலில் அணியப்படும் ஆபரணங்கள் ஆகியவை அணிந்து புத்தம் புது ஆடைகள் அணிந்து, முழங்கை வரை நெய் வழியும் அளவிற்கு பால் சோறும் உண்டு மக்களுடன் கூடி இருந்து உள்ளம் குளிர மகிழ்வோம்.
கூடாரவல்லியன்று அக்காரவடிசல் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?
ஆண்டாள், நாச்சியார் திருமொழியில்
நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ? (9:6)
என்று பாடினாள்.
இதை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார்.
தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து "வாரும் என் அண்ணலே" என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார்.
இதனால் இன்றும் மார்கழி 27ஆம் நாள் ( "*கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா*" என்ற பாசுரம்) அக்கார அடிசல் செய்வது வழக்கமாக உள்ளது.
கூடரவல்லியன்று கோவிந்தனைப் பாடி பரவசமடைவோம்.
Leave a Reply