யோகினி ஏகாதசி, ஜூன் 20, 2017,
யோகினி ஏகாதசி ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகும். நோய்களிலிருந்து விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாகும். தொழுநோய் போன்ற கடுமையான நோயின் தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் சக்தி உடையதாகும்.
யோகினி ஏகாதசியை பற்றி பிரம்மா வைவத்ர புராணத்தில் கிருஷ்ண பகவான் தருமருக்கு எடுத்து சொல்கிறார்.
யோகினி ஏகாதசி குபேரனின் ராஜ்யத்தில் பணி புரிந்த ஒரு யக்ஷனை பற்றியது.
அழகாபுரியை ஆண்டவர் குபேரன். தேவர்களின் பொக்கிஷங்களை காக்கும் யக்ஷர். சிவனின் பக்தர். தினந்தோறும் சிவ பூஜை செய்பவர். அவரிடம் ஹேமமாலி என்ற யக்ஷன் வேலை செய்து வந்தான். அவன் நாள்தோறும் சிவ பூஜைக்காக மானசரோவர் ஏரியிலிருந்து பூக்களை பறித்து வருவான். இது அவனின் பணிகளில் ஒன்று.
ஹேமமாலிக்கு ச்வரூபவதி என்ற மனைவி இருந்தாள். அழகு மிக்கவள்.அவளின் அழகில் மிகவும் ஈர்க்கப்பட்டவன் இந்த யக்ஷன்,
ஒரு நாள் வழக்கம் போல் மானசரோவர் ஏரியில் பூக்களை பறித்துக் கொண்டு, அவற்றை சிவ பூஜைக்கு கொண்டு செல்லாமல் தனது மனைவியிடம் சென்றான் ஹேமமாலி. அவளின் அழகை அனுபவித்து கொண்டு தனது பணி மறந்தான்.
பூஜையில் இருந்த குபேரனுக்கு சிவனுக்கு அர்ப்பிக்க மலர்கள் இல்லை. கோபம் கொண்ட அவர் ஒரு யக்ஷனை அழைத்து காரணம் கண்டறிய சொன்னார். ஹேமமாலி தனது மனைவியுடன் சல்லாபித்திருந்ததை அறிந்த அவர் அவனை கொடிய தொழுநோய் தாக்கட்டும் என சாபமிட்டார். அவன் மனைவியை விட்டு பிரிவான் எனவும் கூறினார்.
உடனே அழகாபுரியிலிருந்து ஹேமமாலி அடர்ந்த காட்டுக்கு அனுப்பப்பட்டான்.தொழுநோயால் அவதிப்பட்டான்.உணவுக்கும் நீருக்கும் காட்டில் அலைந்தான்.
ஒரு நாள் காட்டில் மார்கண்டேய மகரிஷியை தரிசித்தான் ஹேமமாலி. தனது நோய் காரணமாக தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அவனின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு ரிஷியும் காரணம் வினவினார். அவரோ உயிரினங்களிடம் அன்பு கொண்டவர். சிறந்த ஞானி.
ஹேமமாலி எதையும் ஒளிக்காமல் நடந்ததை கூறினான். அவனின் சத்திய வாக்கை மெச்சி மகரிஷி அவனுக்கு இந்த நோயிலிருந்து உய்யும் வழி உரைத்தார். யோகினி ஏகாதசி விரதமிருக்க சொன்னார். அதன் வழி விரதமிருந்து ஹேமமாலிதொழுநோயின் பிடியிலிருந்து விடுபட்டான். மீண்டும் அழகாபுரி சென்று தனது மனைவியுடன் அன்பு வாழ்வு வாழ்ந்தான். தனது அழகிய தோற்றமும் திரும்பக் கிடைக்கப் பெற்றான்.
இவ்வாறாக யோகினி ஏகாதசி விரதமிருந்தால் கொடிய நோய்களிருந்து விடுபடலாம். பாப சுமை இன்றி வாழலாம்.
இதனை எடுத்தியம்பிய கிருஷ்ணர் யோகினி ஏகாதசி விரதமிருப்பது எண்பத்து எட்டாயிரம் பிராமணர்களுக்கு போஜனம் அளித்த பலனை கொடுக்கும் என்றும் சொன்னார்.
யோகினி ஏகாதசி விரதமிருக்கும் முறை
யோகினி ஏகாதசி விரதத்தை நாம் மற்ற ஏகாதசி விரதம் அனுசரிப்பதை போலவே அனுசரிக்க வேண்டும். முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். அரிசி, கோதுமையால் செய்த உணவை உண்ணக் கூடாது.
நாமும் யோகினி ஏகாதசி விரதமிருந்து நோய் இல்லா வாழ்வை அடைந்து மகாவிஷ்ணுவின் துதி பாடி பரமபதத்தை அடைவோமே?
நாங்கள் ஹோமம் மற்றும் பூஜை சேவைகளை நன் முறையில் செய்து தருகிறோம். எங்கள் புரோஹிதர் சேவைகளை பெற இணைய தளத்தில் அணுகுங்கள்.
YOU MAY ALSO LIKE
Leave a Reply