மார்கழி மாத சுக்ல பக்ஷ பிரதோஷம் டிசம்பர் 30, 2017 அன்று வருகிறது. இந்த நாளில் சிவ பெருமானை வழிபடுவது உத்தமமான பலன்களைத் தரும்.
சிவனார் பல அற்புத சக்திகள் உடையவர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் மருத்துவ நிபுணர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
திருச்சியின் அருகில் இருக்கும் ஊட்டத்தூர் சிவன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள சிவ லிங்கம் ரத்தினத்தால் ஆனது. அதனால் அங்கு வீற்றிருக்கும் இறைவன் சுத்த இரத்தினேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்
இந்த கோயிலில் அமைந்து இருக்கும் பஞ்சநதன நடராஜர் மிகவும் பிரசித்தி பெற்றவர். பஞ்சநதனம் என்பது ஒரு சிறப்பு மிக்க கல்லாகும். இந்த கல்லுக்கு சூரிய கிரணங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. இதனால் பஞ்சநதன கல்லில் அமைந்த நடராஜர் சிலைக்கு மருத்துவக் குணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த கோயிலில் பிரம்ம தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பிரம்ம தீர்த்தத்தில், என்றும் வற்றாத ஊற்று நடுவில் இருந்து, நீரைக் கொடுக்கிறது. இதனாலேயே முன்பு ஊட்டத்தூருக்கு ‘ஊற்றத்தூர்’ எனப் பெயர் இருந்தது. இந்த பெயர் மருவி இன்று ‘ஊட்டத்தூர்’ என அழைக்கப்படுகிறது.
ஊட்டத்தூர் நடராஜர் சிறுநீரகக் கோளாறுகளை நீக்க வல்லவர். அவர் வெட்டிவேர் மாலை அணிந்து காட்சி அளிக்கிறார். பிரம்ம தீர்த்தத்தில் நீரெடுத்து,அதனை நடராஜருக்கு அபிஷேகம் செய்து, அவருக்கு வெட்டிவேர் மாலை சமர்ப்பித்து, அந்த மாலையையும், அபிஷேக நீரையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேர் மாலையிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அபிஷேக நீரில் முக்கி வைக்க வேண்டும். அதனை மறு நாள் காலை குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
பஞ்சநதன கல்லும், பிரம்ம தீர்த்த நீரும், வெட்டி வேரும் சேர்ந்து ஒரு மருத்துவ குணத்தைக் கொடுப்பதால் இந்த வெட்டிவேர் சேர்ந்த நீரைப் பருகுபவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சனைகள் தீரும். இதில் சிவனருள் கலந்திருப்பது மிகவும் முக்கியமான விஷயமன்றோ?
சிவனார் சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் மருத்துவ வல்லுநர் என்பதை அறியும் போது வியப்பாகத்தானே உள்ளது?
Leave a Reply