துளசிதாஸ் வடமொழியின் மாகவி,ராமசரிதமானஸ் எழுதிய மகா பண்டிதர் ,ராமனின் மேல் மிகுந்த அன்பு வைத்தவர்,ஆஞ்சநேய பக்தர்-இன்னும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.அவரது அநுமான் சாலிசா ஆஞ்சநேயர் புகழ் பாடுவதோடு துளசிதாஸின் கவித்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
துளசிதாஸின் வாழ்க்கையே மெய்ஞானத்திற்கு வழிகாட்டி - எப்படி தெரியுமா ?
உத்தரப்ரதேசத்தில் உள்ள சித்திரக்கூடத்தில் பிறந்தவர் துளசிதாஸ்.தாயின் வயிற்றில் 12 மாதங்கள் இருந்து பின் முழுமையாக 32 பற்களோடு பிறந்தவர்.பிறந்த போதே ராமா என உரைத்தவர்.எனவே ராம்போலா என பெயர் பெற்றார்.
அவரது ஜாதக ரீதியாக அவரது தந்தைக்கு தீங்கு நேரும் என்பதால் அவரை தாய் தந்தையர் துறந்தனர். ஒரு வேலைக்காரியிடம் வளர்ந்த துளசிதாஸ் எண்ணிலாத கஷ்டங்களை அனுபவித்தார்.
அவரது ஐந்தாம் வயதில் நரஹரிதாஸ் என்பவரால் துளசிதாஸ் தத்து எடுக்கப்பட்டார்.ஏழாம் வயதில் அவருக்கு உபநயனம் செய்து வைத்த நரஹரிதாஸ் அவரை வராகர் கோவிலுக்கு அழைத்து சென்று அவருக்கு முதல் முறையாக ராம கதையை கூறினார்.
அயோத்தியில் தனது படிப்பை ஆரம்பித்த துளசிதாஸ் காசி சென்று வேதங்கள்,வேதாங்தம்,ஜோதிடம்,தத்துவம் ஆகியவற்றை கற்றறிந்தார்.சேஷ சனாதனர் அவரது குரு ஆவார்.பின்னர் சித்திரக்கூடம் வந்து தனது தாய் தந்தையர் இறந்த செய்தி அறிந்தார்.அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்த பின் சித்திரக்கூடத்தில் தங்கி அங்குள்ள மக்களுக்கு ராமகதையை போதித்தார்.
துளசிதாஸ் ரத்னாவளி என்ற பெண்ணை மணம் புரிந்தார்.அவளிடம் மிகுந்த பிரேமை கொண்டு வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு தாரக் என ஒரு மகன் பிறந்து பால்யத்திலேயே இறந்தான். ஒரு நாள் துளசிதாஸ் ஹனுமான் கோயிலுக்கு சென்றிருந்த நேரம் ரத்னாவளி தனது தந்தையின் வீட்டிற்கு சென்றாள். வீடு வந்து ரத்னாவளியை தேடிய துளசிதாஸ் அவளது தந்தையின் வீட்டிற்கு சென்றார்.
நதியினை கடந்து அவளை காணச் சென்றார்.கோபம் கொண்ட ரத்னாவளி மனைவியிடம் இருக்கும் ஈடுபாட்டில் பாதியை கடவுளிடம் காட்டினால் எளிதில் இறைவனடி சேரலாம் என வெகுண்டுரைத்தாள். அவளது வார்த்தைகளின் உண்மையை உணர்ந்த துளசிதாஸ் உடனே துறவறம் பூண்டார்.இல்லற வாழ்வை விட்டொழித்தார்.
துளசிதாஸ் வால்மீகியின் அவதாரம் எனப் போற்றப்படுகிறார்.இதற்கு காரணம் ஹனுமான் வால்மீகிக்கு அளித்த வரமாகும்.வால்மீகி கலியுகத்தில் அவதாரமெடுத்து ராமாயணத்தை பிராந்திய மொழியில் எழுத வேண்டும் என்பது வால்மீகிக்கு ஆஞ்சநேயர் அளித்த வரம்.
இதற்கு பின்னணியில் ஒரு கதை உண்டு.வால்மீகியிடம் ஹனுமான் பல முறை அவர் எழுதிய ராமாயணத்தை விவரிக்க வேண்டினார்.ஆஞ்சநேயரை ஒரு குரங்காக மதித்த வால்மீகி அவருக்கு ராமகதை சொல்ல மறுத்தார்.ஆனால் ஆஞ்சநேயர் ராவண வதத்திற்கு பின் இமய மலை சென்று ராம கதையை காட்சிகளாக பாறைகளில் செதுக்கினார். தனது ராமாயணத்தை விட ஹனுமானின் ராம கதை பிரசித்தி பெற்றுவிடுமோ என வால்மீகி அஞ்சினார்.
அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட ஹனுமான் தான் செதுக்கிய பாறைகளை கடலில் வீசி எறிந்தார்.வால்மீகியை கலியுகத்தில் அவதரித்து தனது பிராந்திய பாஷையில் ராமாயணம் எழுத வரம் அருளினார்.அதன்படியே வால்மீகி கலியுகத்தில் துளசிதாசராக அவதரித்து ராமசரிதமானஸ் என்ற இராமகதையை தனது பிராந்திய பாஷையாம் அவதியில் எழுதி மக்கள் உய்யும் வழி காட்டினார். வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதினார் என்பது நாம் அறிந்ததே.
துளசிதாஸ் ராமரையும்,ஹனுமானையும் நேருக்கு நேர் பார்த்தவர்.பல ஆன்மீக அனுபவங்கள் பெற்றவர். அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணமாக காசியில் ஒரு இடம் துளசி காட் என அழைக்கப்படுகிறது.அதே போல் காசியில் அவர் ஏற்படுத்திய சங்கடமோச்சன் என்னும் ஹனுமான் கோயில் உள்ளது.
விநாயகபத்ரிகா ,ராமசரிதமானஸ்,ஹனுமான் சாலிசா ஆகியவை துளசிதாஸின் கவிதை திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இத்தகைய பெரியோனை ,கவித்துவத்தில் உயர்ந்து,ராம பக்தியில் சிறந்து விளங்கும் மகா கவியை வணங்கி போற்றுவோம்.
Leave a Reply