சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் தேய் பிறை சதுர்த்தி திதி அன்று அனுசரிக்கப்படுகிறது. பிள்ளையாருக்கு விரதமிருந்து, சந்திரனை கண்ட பிறகு பிள்ளையார் பூஜை செய்து விரதம் முறிக்கும் நோன்பு இது.
இந்த வருடம், தை மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி பிப்ரவரி 3ம் தேதி அன்று வருகிறது.
சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில் படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளைத் தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள் பெறலாம்.
’சங்கட’ என்றால் கஷ்டம் மற்றும் ‘ஹர’ என்றால் போக்குதல். சங்கடங்களைப் போக்கும் விக்ன விநாயக மூர்த்தியின் தாள் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும்.
பிள்ளையாருக்கு ‘கணநாதன்’ என்றும் ‘கணநாயக்’ என்றும் பெயர் உண்டு. அவர் இந்த பெயரை எப்படிப் பெற்றார் எனத் தெரியுமா?
கணநாதன் என்றால் கணங்களின் கூட்டங்களுக்குத் தலைவன் எனப் பொருள். பிள்ளையார் கணங்களின் தலைவர் என்பது நாம் அறிந்ததே. இன்னுமொரு அர்த்தம் பிள்ளையார் கணனை வென்று, கணநாதன் ஆனார் என்பது.
“கணன்” அபிஜித் மன்னருக்கும், குணவதி ராணிக்கும் பிறந்தவன். மிகவும் பலவானும். திறமைசாலியும் ஆவான். சிவனை வேண்டி, பல வரங்கள் பெற்றான். இதனால் கர்வம் மிகுந்த நடத்தை உடையவனாக இருந்தான்.
ஒரு நாள் கணன் கபில மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குச் சென்ற போது, அவரிடமிருந்த சிந்தாமணி என்னும் அரிய மணியை பலவந்தமாகப் பிடுங்கிச் சென்றான். அந்த மணி யாருக்கு என்ன வேண்டுமோ அதை அள்ளி வழங்கவல்லது. எத்தனை மனிதர்கள் வந்தாலும், அவர்களுக்கு உணவு அளிக்கும் சக்தி உடையது.
சிந்தாமணியை இழந்த கபில மகரிஷி வருத்தமடைந்தார். பிள்ளையாரிடம் அந்த மணியை மீட்டுத் தருமாறு வேண்டினார். பிள்ளையாரும் கணனின் கனவில் சென்று அவன் தலையை வெட்டி எறிந்தார்.
கனவிலிருந்து விழித்து எழுந்த கணன் தனது தவறை எண்ணி வருந்தவில்லை. மாறாக கோபம் கொண்டு, கபிலரைக் கொல்ல படையோடு சென்றான் அவன் தந்தை அவனைத் தடுத்தும் அவன் கேட்கவில்லை.
கபிலர் ஆஸ்ரமத்தில் அவன் கண்ட காட்சி என்ன தெரியுமா? பிள்ளையார் அவனுக்கு முன்பாகவே, தனது படையோடு கபிலர் ஆஸ்ரமத்திற்கு அவரைக் காப்பதற்காக வந்துவிட்டார்.
பிள்ளையாருக்கும், கணனுக்கும் நடந்த சண்டையில் கணன் தோற்றுப் போனான். மடிந்தும் போனான். பிள்ளையார் கபிலருக்கு சிந்தாமணியைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் முனிவர் பிள்ளையாரிடமே அந்த மணியைக் கொடுத்து விட்டார். சிந்தாமணி ஆசையைத் தூண்டும் பொருளாக இருப்பதால், கபிலர் அதனை தனது வசம் வைத்திருக்க விரும்பவில்லை.
இந்த சம்பவம் நடந்த இடம் புனேவிற்குப் பக்கத்தில் இருக்கும் தேயூர் என்பதாகும். இந்த இடத்தில் இருக்கும் கோயிலில் இருக்கும் பிள்ளையாருக்கு சிந்தாமணி விநாயகர் எனப் பெயர்.
இவ்வாறாக கணனை வென்று விநாயகர் ‘கணநாதன்’ எனப் பெயர் பெற்றார். அப்பேர்ப்பட்டவரை சங்கடஹர சதுர்த்தி அன்று வணங்கி, வேண்டும் வரம் பெறுவோமாக!
Leave a Reply