மகரசங்கராந்திக்கு பின் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்தது. சூரியன் தன் பயணத்தை வடக்கு நோக்கி துவக்கிய நிலையில், கோடையின் வெப்பமும், வசந்தத்தின் இனிமையும் துவங்கும் நேரம் இது. சூரியன் தனது சக்தியை முழுமையாக வெளிப்படுத்த ஆரம்பிக்கும் இந்த தை அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் நம் முன்னோர்கள் நம்மை முழுமையாக ஆசிர்வதிப்பார்கள் என்பது உறுதி.
சூரியன் நம் ஆத்மாவின் அடையாளம் என ஜோதிடத்தில் ஒரு கருத்துண்டு. சூரியனின் சக்தி அபரிமிதமாக இருக்கும் இந்த தை அமாவாசையில் நாம் நம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது முந்தைய வினைகள் தீரும். நம் முன்னோர்கள் இந்த அமாவாசையில் பூமிக்கு இறங்கி வந்து நம்மை ஆசிர்வாதிப்பார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.
இன்றைய தினம் புனித நதியில் அல்லது சமுத்ர ஸ்நானம் செய்வது விசேஷம்.மக்கள் பலரும் ராமநாதபுரம், சேதுக்கரை, தனுஷ்கோடி, தேவிப்பட்டினம், கன்யாகுமரி, முஹுந்தராயச்சத்திரம் போன்ற இடங்களில் நீராடி, முன்னோர் அருள் பெறுகிறார்கள்.
தை அமாவாசை மௌனி அமாவசை என வட நாட்டில் அழைக்கப்படுகிறது. இன்று மௌனம் காத்தல் அதிமுக்கியமாக கருதப்படுகிறது.மௌனம் மனதை ஒருமைப்படுத்தி ஆன்ம ஞானத்தை அளிக்கிறது. இதற்கு மகி அமாவாசை என்றும் பெயருண்டு. இதுவே மஹா சிவராத்திரிக்கு முன்பாக அமையும் கடைசி அமாவாசை ஆகும்.
மௌனி அமாவாசை அன்று கங்கை போன்ற புனித நதிகளில் நீராடுவது வழக்கம். இது ராஜசூய யாகம் மற்றும் அசுவமேத யாகம் செய்வதற்கு ஒப்பாகும். இந்த நாளில் எளியோருக்கு பொருள், ஆடை மற்றும் உணவு அளித்து மக்கள் புண்ணியம் தேடுவர். குஷ்ட ரோகிகளுக்கு இன்றைய தினம் உதவுவது நன்மை பயக்கும். ஹோமம் செய்வதும் நல்லது.
மௌனி அமாவாசை அன்று சந்திரனும் சூரியனும் மகர ராசியில் சேர்ந்து இருப்பதால் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Leave a Reply