பிரதோஷம் வளர்பிறை தேய்பிறை த்ரயோதசி திதிகளில் வருகிறது என்பதும் அந்த வேளையில் நாம் நந்தி பகவானையும் வழிபடுகிறோம் என்பதும் அனைவரும் அறிந்ததே.
1. நந்தி சிவனின் வாகனமாவார். அவரின் அனுமதி இன்றி யாரும் கைலாயம் நுழைய முடியாது. கைலாயத்தின் வாயில் காப்போனாவார்.
2..நந்தி பகவான் சிவனாரோடு என்றும் இருக்க வேண்டுமென்று வரம் பெற்றவர். சிவனுக்கு தொண்டாற்றுவதை தனது முதல் குறிக்கோளாக கொண்டவர். அவரின் உதவியாளராகவும் வாகனமாகவும் திகழ்பவர்.
3. நந்தி சிவாலயங்களில் சிவனின் கருவறைக்கு எதிராக அமர்ந்திருப்பது போல் அமைக்கப்பட்டு உள்ளார். காளை வடிவம் கொண்டவர். அவரின் கவனம் எப்போதும் சிவனை துதிப்பதிலேயே இருப்பது போல் உள்ளது. இது ஜீவாத்மா எப்போதும் பரமாத்மாவோடு இணைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
4. நந்தி பகவான் சிலாதர் என்னும் முனிவர் சிவனாரிடம் தவம் இருந்து பெற்ற பிள்ளை.
5. நந்தி ஆடல், பாடல், ஆயுர்வேதம், அச்வவேதம், காமவேதம் ஆகியவற்றை தோற்றுவித்தவர். ஆடல் பாடல்களில் சிறந்து விளங்க நினைத்தால் நந்தி பகவானை வணங்குதல் அவசியம்.
6. சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர், திருமூலர், சிவயோக முனி, வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் நந்தி பகவானின் சிஷ்யர்கள் ஆவார்கள். இவர்களுக்கு சைவ மதத்தின் சித்தாந்தத்தை போதித்து எட்டு திக்குகளிலும் சைவத்தை பரப்ப அனுப்பினார் .
7. நந்திக்கு அருகம் புல்லும் சிவப்பரிசியால் செய்த நெய்வேத்யமும் அர்ப்பணிக்க வேண்டும்.
8. நந்தி என்றால் ஆனந்தம் எனப் பொருள். எல்லோரையும் ஆனந்தமாக வைத்திருப்பவர்.
9. நந்தி பகவானை குறித்து பல கதைகள் உண்டு.
அவரின் சாபத்தினாலேயே ராவணனின் இலங்காபுரி தீபிடித்து எரிந்தது. ராவணின் ராஜ்யம் ஒரு குரங்கால் தீ வைக்கப்படும் என்பது அவர் இட்ட சாபம்.
அன்னை பார்வதி மீனவப் பெண்ணாக பிறந்து சிவனின் கரம் பற்றியது திருவிளையாடல் கதைகளில் ஒன்று. அப்போது நந்தி திமிங்கலமாக உருவெடுத்து, மக்களை துன்புறுத்தி, தன்னைக் கொல்ல சிவன் மீனவராக தோன்ற உதவினார். திமிங்கலமான அவரை கொன்று சிவன் பார்வதியை மணந்தார்.
10. சிவாலயங்களில் நந்தியின் அனுமதி பெற்றே சிவனை வணங்க அவர் கருவறைக்குள் செல்ல வேண்டும்.
நந்தியாரின் பெருமை அறிந்த பின் அவரை மேலும் ஆராதித்து அவரின் அருளுக்கு பாத்திரமாவது தானே முறை ?
Leave a Reply