கார்த்திகை மாத சஷ்டி நவம்பர் 24ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த தினத்தில் நாம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியின் சிறப்புகளைப் பார்ப்போமா?
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் முருகன் பால தண்டாயுதபாணியாக நிற்கிறார்.
அவரது தாய் தந்தையர் ஞானப் பழத்தை தனது தமையன் விநாயகனுக்குத் கொடுத்து விட்டமையால் கோபம் கொண்டு தாய் தந்தையை விட்டுப் பிரிந்து, ஒரு குன்றின் மேல் நின்றார். அவரை சமாதானப்படுத்த அங்கு சென்ற ஔவையார் அவரையே ‘பழம் நீ’ என அழைத்ததால் அந்தக் குன்று பழநி ஆயிற்று.
பழநி முருகனின் சிலை நவ பாஷாணத்தால் ஆனது. நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான நச்சுப் பொருட்களால் ஆனது. சரியான விகிதத்தில் கலந்தால் இவற்றிற்கு மருத்துவ குணம் வரும்.
பழநி முருகனுக்கு தினமும் பாலாபிஷேகமும், பஞ்சாமிருத அபிஷேகமும் செய்யப்படுகின்றன. பழநி பஞ்சாமிருதம் நாம் விரும்பி உண்ணும் பிரசாதமாகும். சர்க்கரை, தேன், கற்கண்டு, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு செய்த இந்த பிரசாதத்தை விரும்பாதவர்கள் உண்டோ?
பழநி கோயிலில் இரவில் நடை மூடுவதற்கு முன்பு முருகனின் சிலைக்கு சந்தனம் பூசுவார்கள். காலையில் நடை திறந்த பின் அந்த சந்தனத்தை ‘இராக்கால சந்தனம்’ எனப் பிரசாதமாக வழங்குவார்கள். இந்த சந்தனம் முருகன் சிலையிலிருந்து கிடைக்கும் மருத்துவக் குணங்களோடு இருக்கும்.
பழநிக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பலருண்டு. பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்தல், அலகு குத்துவது போன்ற வழிபாட்டு முறைகளை மேற்கொள்ளுகிறார்கள்.
பழநியில் மொட்டை போடுவது பிரசித்தமான ஒன்று.
இவ்வாறு முருகனின் வாசஸ்தலமான பழநியின் விசேஷங்களை அறிந்த பின் அங்கு குடியிருக்கும் இறைவனின் திருவருள் பெற அவரை சஷ்டி அன்று வணங்குவது உசிதமான ஒன்றுதானே?
Leave a Reply