பிரதோஷ கால அபிஷேக பலன்கள்
கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ பிரதோஷம் டிசம்பர் மாதம் 15ம் தேதி வருகிறது. பிரதோஷம் சிவ பூஜைக்கு உகந்த நாள். எனவே அந்த நாளில் கோயில் சென்று சிவனை வணங்கி அவரின் அருளைப் பெற எந்த சிவ பக்தரும் மறப்பதில்லையே?
சிவனை சயனக் கோலத்தில் கண்டு இருக்கிறீர்களா?
பெருமாள் சயனக் கோலத்தில் இருப்பது சகஜமான ஒன்று.அவருக்கு அனந்த சயனன் என்றொரு பெயரே உண்டு. ஆனால் சிவனை சயனக் கோலத்தில் காண்பது அரிய ஒன்று. இந்தக் கோலத்தை நாம் சுருட்டப்பள்ளியில் தான் காண முடியும். சுருட்டப்பள்ளியில் இருக்கும் சிவனுக்கு பள்ளிகொண்டீஸ்வரர் சயன சிவன் என்று பெயர்.
சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டைக்கு அருகே சென்னை- பெரியபாளையம்- திருப்பதி சாலையில் அமைந்து உள்ளது.
சுருட்டப்பள்ளியில் இறைவன் சயனக் கோலத்தில் இருப்பதன் பின்னணியில் ஒரு புராணக் கதை உண்டு.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்க முயன்ற போது, வெளியே கிளம்பிய ஆலஹால விஷத்தை உண்டு, தனது கழுத்தை நீலமாக்கிக் கொண்டவர் சிவனார்.
அவ்வாறு விஷத்தை உண்ட களைப்பில், சிவன் பார்வதித் தாயின் மடியில் படுத்துக் களைப்பாறிய இடமே சுருட்டப்பள்ளி. அப்போது அங்கே அவரை தரிசிக்க வந்த தேவர்களையும், கடவுளரையும் காண விடாமல் நந்தி தேவன் தடுத்தார். அன்னையும், ஐயனும் தனித்திருந்ததே இதற்குக் காரணம்.
களைப்பு நீங்கி வெளியே வந்த சிவன் அனைவரையும் கண்ட ஆனந்தத்தில் நந்தியின் கொம்புகளின் மேல் ஆனந்தத் தாண்டவமாடினார். இந்த வேளையே முதல் பிரதோஷ வேளையாகக் கருதப்பட்டது. இந்த சம்பவம் நடந்த நாள் ஒரு கிருஷ்ணபக்ஷ திரயோதசி. அன்றிலிருந்தே திரயோதசி அன்று பிரதோஷம் அனுசரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சுருட்டப்பள்ளியில் பிரதோஷ பூஜை சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ? சுருட்டப்பள்ளியில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் வறுமையும் துன்பமும் நீங்கும்.
நாமும் இத்தகைய சிறப்பு மிக்க கோயிலை ஒரு முறை சென்று தரிசித்து புண்ணியம் தேடுவோமே?
மேலும் பிரதோஷம் பற்றி அறிந்து கொள்ள
Leave a Reply