மாசி மகம் என்றாலே மக நக்ஷத்திரத்தின் தனித்துவமும், பௌர்ணமியின் செறிவும் நினைவுக்கு வரும். ஆம், மாசி மாதத்தில், பௌர்ணமி நிலவும், மக நக்ஷத்திரமும் சேரும் நாளில் கொண்டாடப்படும் தமிழர் நன்னாளே மாசி மகம் எனப்படும்.
மாசிமகம் மார்ச் 1, 2018, வியாழக்கிழமை
மக நக்ஷத்திரத்தின் அருமைகள்
மக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மன்னர்களாகப் புவி ஆள்வார்கள். மிகுந்த சக்தியும், திறனும் படைத்தவர்கள். மகம் பித்ருக்களுக்கான நக்ஷத்திரமாகவும் கருதப்படுகிறது.
பௌர்ணமியின் சிறப்பு
பௌர்ணமி அன்று, நிலவு முழுமையான தோற்றம் பெற்று, சந்திரனின் முழு சக்தியும் உடையதாகத் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும், நலனும் அளிக்கக் கூடிய நாளாகும்.
மகமும், பௌர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. இந்த நாளில், இறைவனை வேண்டி நிற்போருக்கும். பித்ரு சேவை செய்வோருக்கும் நிறைந்த பலன்கள் கிட்டும்.
மாசி மகம் கொண்டாடுவதின் புராண வரலாறு
வல்லாளர் என்பவர் திருவண்ணாமலையில் அரசாண்டு வந்தார். குழந்தை இல்லாத அவர் முன், எம்பெருமானாம் சிவன் ஒரு பாலகனாகத் தோன்றி, அவர் இறக்கும் தருவாயில், அவர்தம் ஈமச் சடங்குகளைச் செய்வதாக வாக்களித்தார்.
அவ்வாறே, அந்த அரசர் இறந்த அன்று, சிவ பெருமான் அவரின் ஈமச் சடங்குகளை செய்ததாகப் புராணம் கூறுகிறது. இன்று கூட, மாசி மகம் அன்று, சிவ பெருமான் பூமிக்கு வந்து, அந்த அரசருக்கு உரிய சடங்குகளைச் செய்வதாகக் கருதப்படுகிறது.
மாசிமகத்தைப் பற்றி மற்றுமொரு புராணக் குறிப்புண்டு. எம்பெருமான் சிவனார் உலகத்தை அழித்து மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதை உணர்ந்த பிரம்மா, அவரிடம் மீண்டும் உலகத்தை உருவாக்குவது எப்படி எனக் கேட்டார். சிவனும், பிரம்மாவிடம், ஒரு கும்பத்தில் அம்ருதத்தை நிரப்பி, அதை மேரு மலையின் உச்சியில் வைக்கக்கூறினார்.
பிரளயத்திற்குப் பிறகு, உலகம் அழிந்த நிலையில், மீண்டும் அதனை உருவாக்க, அந்த அம்ருத கலசத்தை வைத்த இடத்திலிருந்து உபயோகிக்கக் கூறினார். பிரம்மாவும் அப்படியே செய்தார். இது நடந்த தினம் மாசி மகம். ஆம், பிரம்மா மாசி மாதத்தில், மக நக்ஷத்திரம் தோன்றிய அன்றே உலகை உருவாக்கினார்.
அந்த இடம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது. இந்த நாளில், சிவனாரின் சக்தி முழுமையாக அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கும்.
என்னப்பன் கந்தனாம் முருகவேள் தனது தகப்பனுக்கு உபதேசம் அளித்த திருநாளும் இதே.
மாசி மகத்தன்றே, அன்னை பார்வதி தக்ஷனின் மகள் தாக்ஷாயணியாக அவதரித்தாள். எனவே, பெண்டிர் இந்த நாளை விரதத்திற்கு உகந்ததாகக் கருதி, அம்மனுக்குப் பூஜை செய்து, புண்ணியம் தேடுகிறார்கள்.
பகவான் விஷ்ணு பூமியை பாதாளத்திலிருந்து எடுத்து வந்த வராஹ அவதாரத் திருநாளும் இதே.
மாசி மகம் தமிழர் திருநாள்
தமிழ் பேசும் மக்கள் உலகின் எந்தெந்த மூலைகளில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மகம் கும்பகோணம், ஸ்ரீரங்கம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூரிலும் கொண்டாடப்படுகிறது.
சேக்கிழார், பெரியபுராணத்தில் மாசி மகத்தின் சிறப்பைப் பின்வருமாறு கூறுகிறார்:
“பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுவதற்கு வந்து வழி படுங்கோவில்"
கங்கை நதியில் ஸ்நானம் செய்வதற்கு அடுத்தபடியாக மகாமகக் குளத்தில் நீராடுவது சிறப்பானது.
இப்படியாக, மாசி மகம் நம் இல்லல்களை விடுவித்து, நன்மைகளை அளிக்கிறது. புண்ணியத்தைத் தேடிக் கொடுக்கிறது.
Leave a Reply