கார்த்திகை முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்த நாள். தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு குறைவில்லாமல் வரங்களை அள்ளித் தரும் வல்ல அல்லவா கந்தக் கடவுள்?
மாசி மாதத்தில் கார்த்திகை விரதம் பிப்ரவரி 22ம் தேதி,வியாழக் கிழமை அன்று வருகிறது.
கந்தக் கடவுளின் மனைவியர் சுட்டிக் காட்டும் தத்துவம்
கந்தக் கடவுளின் இரு மனைவியர் தேவயானையும், வள்ளியும் ஆவார்கள்.
இதில் தேவயானை இச்சா சக்தியையும், வள்ளி கிரியா சக்தியையும், கந்தக் கடவுள் ஞான சக்தியையும் குறிப்பிடுகிறார்கள்.
இதன் பின்னணியில் உள்ள தத்துவம் என்னவென்றால் ஆத்மாவிற்கு இறைவனை அடைய வேண்டும் என்ற உந்துதல் அல்லது எண்ணம் (இச்சா சக்தி) தேவை. இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்பாடு (கிரியா சக்தி ) தேவை. இவை இரண்டும் சேர்ந்து ஆத்மாவை இறைவனிடம் (ஞான சக்தி) கொண்டு சேர்க்கும். இந்த உண்மையையே வள்ளி மற்றும் தேவயானை ஆகியோரின் திருமணம் உணர்த்துகிறது.
தேவயானையின் திருமணம்
தேவயானை இந்திரனின் மகளாவாள். தேவ சேனாபதியான முருகன் சூரபத்மனை வென்று, தேவர்களுக்கு அவர்களின் சக்தியை மீட்டுக் கொடுத்தமையால், இந்திரன் தனது மகளை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
வள்ளி திருமணம்
வள்ளி வேடவர் குலத் தலைவனாம் நம்பி ராஜனின் வளர்ப்பு மகள்.பல விதமான காதல் முயற்சிகள் செய்து முருகன் அவளின் கரம் பற்றினார்.
இரு வகையான பக்தி நிலை
தேவயானை ,வள்ளி திருமணங்கள் பக்தர்களின் இரு வகையான பக்தி நிலையினைக் காட்டுகின்றன.
தேவயானை திருமணம் வழக்கமான முறையில் அமைந்த ஒன்று. இது பக்தர்கள் மரபு வழுவாமல், வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறியபடி இறைவனை வணங்கும் பக்தி நிலை. வள்ளி திருமணம் காதல் திருமணம். இது பக்தர்கள் இறைவனை தங்களின் அன்பின் மிகுதியால் வணங்கும் நிலை.
நாமும் நமது பக்தியின் துணை கொண்டு, கந்த வேளின் அருளுக்குப் பாத்திரமாகி, வாழ்வில் இன்புற்று இருக்கலாமே?
Leave a Reply