அங்காரிக சங்கடஹர சதுர்த்தி, ஜூன் 13, 2017
சங்கடஹர சதுர்த்தி விநாகயரின் பெருமைபாடுவது. பிள்ளையாரின் அன்பர்களுக்கு மிகவும் பிடித்த தினம்.அவரது புகழ் பாடி, வணங்கி, விரதமிருந்து அவரின் அருளை பெறும் தினம். அதிலும் செவ்வாய் தினம் அன்று வரும் அங்காரிக சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது. பக்தர்கள் தாங்கள் விரும்பியதை விநாயகரிடம் வேண்டி பெறும் நாள்.
பிள்ளையாரின் தனி பெருமை
பிள்ளையார் முழுமுதற் கடவுள். அவரை வணங்கி எந்த காரியத்தையும் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
பிள்ளையார் கணபதி எனப் பெயர் பெற்றவர். கணம் என்றால் கூட்டம் எனப் பொருள். அணுக்களும் பலவித சக்திகளும் நிறைந்தது இந்த அண்டம். இந்த அணுக்களையும், சக்திகளையும் கட்டி காப்பவர் பிள்ளையார். உலகம் சீராக இயங்ககாரணமானவர்.
பரப்ரம்மஸ்வரூபமாக விளங்கும் பிள்ளையாருக்கு உருவமோ, குணமோ கிடையாது.
அவர் நம்முள் குண்டலினி சக்தியை எழுப்பி நமக்கு ஆன்மீக ஞானம் அளிக்கும் கடவுள்.
ஆனை முகத்தோடு நம் உள்ளம் கவர்ந்த அருட்பெருங்கடவுளின் திரு உருவம் உணர்த்தும் உண்மைகளை பார்ப்போமா?
1. ஆனை முகம் கொண்டவர் பிள்ளையார். அவரின் பெரிய வயிறு அண்டத்தின் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் அவரின் பெருந்தன்மையை குறிக்கிறது. நாமும் நம் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை ஒரு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
. 2. அவரின் உயர்த்திய கை அவர் நம்மை காக்கும் கடவுள் என்பதை உணர்த்துகிறது. நம்மை எல்லாவித தீய சக்திகளில் இருந்தும் காப்பவர் பிள்ளையார்.
3. அவரின் ஒற்றை தந்தம் ஒருமுகமான சிந்தனையை குறிக்கிறது. வாழ்வில் லட்சியத்தை அடைய தேவையான ஒருமுகப் போக்கை குறிக்கிறது.
4. அவரது துதிக்கை ஓம் என்னும் பிரணவத்தை வெளிப்படுத்துகிறது.
5. அவர் கைகளில் அங்குசமும் பாசமும் வைத்து உள்ளார். அங்குசம் சக்திகளை எழுப்புவது. பாசம் அந்த சக்திகளை கட்டுப்படுத்துவது. நம் வாழ்வில் சக்திகளின் எழுச்சி இருக்கும் போது அவற்றை கட்டுப்படுத்தி வாழ்ந்தால் தானே நமக்கு வெற்றி கிடைக்கும்?
6. பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூரு என்பது நாம் அறிந்ததே. ஆனை முகத்தோன் தனது பெரிய உடம்போடு சிறிய வாகனத்தில் காட்சி அளிப்பது ஒரு விந்தைதான். சரி, ஏன் எலி வாகனம் என சிந்தித்தீர்களா?
எலி எந்ததொரு கயிறையும் கடித்து அறுக்க வல்லது. எந்த தளையையும் மீற வல்லது. அது போல் நாமும் விக்ன விநாயகனின் பாதம் பணிந்து அவரை போற்றும் மந்திரங்களை சொல்லி எந்ததொரு தடையையும் நீக்கி விடலாம்.
இப்பேற்பட்ட எம்பெருமானை சங்கடஹர சதுர்த்தி அன்று வணங்கி, விரதமிருந்து பயன் பெறுவோமாக.
Leave a Reply