கார்த்திகை பெண்களின் அருமை அறிந்த நமக்கு முருகனின் ஆயுதமாம் வேலின் மகிமை தெரிய வேண்டிய ஒன்று.
வேல் முருகனுக்காக அன்னை பார்வதியால் படைக்கப்பட்ட ஆயுதம். முருகன் சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் என்பது அறிந்த செய்தி. அவர் அசுரர்களை அழிக்க தேவர்களின் படைகளுக்கு தலைமை தாங்கினார். அப்போது அவரது ஆயுதமாக வேல் ஒன்றினை அன்னை பார்வதி தனது சக்தியின் வடிவாக தோற்றுவித்தார். இந்த வேல் கொண்டே முருக பெருமான் சூரபத்மனை போர்க்களத்தில் சாய்த்தார்.
முருகன் கை வேலுக்கு தனிப்பட்ட மகிமைஉண்டு. அது என்ன தெரியுமா?
வேல் கொண்டு சூரபத்மனை சாய்த்தார் முருகர். அதனால் வேல் வெற்றியின் சின்னமாக விளங்குகிறது. வேலை வணங்குவோருக்கு வாழ்வில் எந்த ஒரு பயமும் இல்லை.
வேலின் துணை கொண்டு நாம் நமக்கு தொல்லை தரும் சக்திகளை அழித்து விடலாம்.
சூரபத்மனின் அழிவு நம்முள் இருக்கும் அகந்தையின் அழிவை உணர்த்துகிறது. சூரபத்மனை அழிக்க முருகனுக்கு துணை நின்றது வேலாகும்.
வேல் உலகில் நன்மை தீமைக்குள் நடக்கும் போராட்டத்தை உணர்த்துகிறது. இறுதியில் நன்மையே வெல்லும் என்பதை காட்டுகிறது.
அன்னை பார்வதியின் சக்தியில் பிறந்தது வேல். இது ஞானத்தின் இருப்பிடம். வேலை வணங்கினால் ஆன்மீக அறிவு கிடைக்கும்..
வேல் ஒரு கூர்மையான ஆயுதம். அதன் கூர்மையான நுனி ஆன்மிக சக்தியின் கூர்மையை காட்டுகிறது. மனம் ஒருமுனைப்பட்டு முருகனை வணங்க வேண்டிய அவசியத்தை காட்டுகிறது. வேலின் நீளமும் ஆழமும் மனித சிந்தனைகளின் ஆழத்தை காட்டும் வண்ணம் அமைந்து உள்ளன.
வேலினை வாங்கினால் நமக்கு ஆன்மீக சக்தி பெருகும். முருகனை சென்றடைய முடியும்.
நமது பிரார்த்தனைகளை முருகனிடம் கொண்டு சேர்க்கும் சக்தி வேலுக்குண்டு. அதிலும் நமது கஷ்ட காலத்தில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன் முருகன்.
வேலின் மகிமை அறிந்த பக்தர்கள் தங்கள் பக்தியின் சின்னமாக அல்லது வேண்டுதல் காரணமாக அலகு குத்தி கொள்ளும் வழக்கமுண்டு. இது தைபூசம் போன்ற திருவிழாகாலங்களில் நாம் காணக் கூடிய காட்சி.
வேலுண்டு வினை தீர்க்க. அந்த வேலை வணங்கி, கார்த்திகை விரதமிருக்கும் நாளில் நம் வினை தீர்க்கும் வழி தேடுவோமே?
Leave a Reply